ஸ்டெர்லைட் விவகாரம்: வக்கீல் வாஞ்சிநாதனை விடுதலை செய்ய வலியுறுத்தல்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்ட வக்கீல் வாஞ்சிநாதனை விடுதலை செய்ய வேண்டும் என்று மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.
மதுரை,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்த்தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டு வந்ததை கண்டித்து பொதுமக்கள் நடத்திய கண்டன ஊர்வலத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். அதனை தொடர்ந்து இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களை குறிவைத்து போலீசார் அவர்களின் வீடுகளுக்கு சென்று கைது செய்து வருகின்றனர்.
இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கலவரத்தை தூண்டிவிட்டதாக மதுரை ஐகோர்ட்டு வக்கீல் வாஞ்சிநாதன் சென்னையில் கைது செய்யப்பட்டார். இதற்கு பல்வேறு வக்கீல் சங்கங்களின் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே, வக்கீல் வாஞ்சிநாதன் கைது நடவடிக்கையை கண்டித்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட செயலாளர் ஜிம்ராஜ் மில்டன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்த வக்கீல் வாஞ்சிநாதனை தூத்துக்குடி போலீசார் சென்னை விமானநிலையத்தில் கைது செய்தனர். இவர் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கில் துத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரை ஐகோர்ட்டில் ஆஜராகி வந்தார். கடந்த மார்ச் மாதம் அங்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு நடத்திய பொதுக்கூட்டத்துக்கு அனுமதி பெற்றுத்தந்தார். மேலும், ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ராஜேசுவரன் ஆணையத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆஜராகி வந்தார்.
அதேபோல, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கான சட்ட உதவிக்குழு வக்கீல்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், தூத்துக்குடி கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் பலியானவர்கள் குறித்து ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படாமல் இருப்பது, போலீசாரின் ஒரேயொரு இரு சக்கர வாகனம் எரிந்து போனது குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது, 5 வழக்குகளை மட்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றியது, மீதமுள்ள 238 வழக்குகளை தூத்துக்குடி போலீசார் விசாரணை நடத்துவது ஆகியன பொதுமக்களை பயமுறுத்துவதற்காக போலீசாரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகும்.
ஏற்கனவே, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறையில் உள்ளவர்கள் மீது சுமார் 30 பொய் வழக்குகளை போலீசார் போட்டுள்ளனர். தற்போது, அவர்களுக்கு சட்டரீதியாக உதவி செய்து வருபவர்கள், வக்கீல்கள் ஆகியோரை மிரட்ட தனித்தனியாக பொய் வழக்கு பதிவு செய்கின்றனர்.
இது போன்ற மிரட்டல்களுக்கு பயந்து பின்வாங்காமல் மக்களின் ஜனநாயக உரிமைகளை காப்பதற்கு இந்த மையம் என்றும் துணை நிற்கும். மேலும், தூத்துக்குடி மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். வக்கீல் வாஞ்சிநாதனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.