ஸ்டாலின் கைதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது
தி.மு.க.செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
தமிழக கவர்னர் மாவட்டங்களில் ஆய்வு நடத்தி வருகிறார். அவரது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். நாமக்கல் மாவட்டத்தில் கவர்னர் ஆய்வு நடத்த வந்த போது கருப்புக் கொடி காண்பித்த தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
இதை கண்டித்து தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் சென்னையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட சென்றார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் தளபதி, வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் தி.மு.க.வினர் 103 பேரை கைது செய்தனர்.
மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.