வேலையில்லா இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலையில்லா இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலையில்லா இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
தொழில் கடன்வேலையில்லா இளைஞர்கள் சுயதொழில் தொடங்குவதற்காக தமிழக அரசு மானியத்துடன் வங்கிகளில் கடன் பெறும் விதமாக சிறப்பு திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டு மொத்த வருமானம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு கீழ் இருக்க வேண்டும்.
விருப்பம் உள்ளவர்கள் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.3 லட்சம் மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.1 லட்சம் என்ற அதிகபட்சமாக திட்ட முதலீட்டுக்கான தொழில் கடன் விண்ணப்பங்களை வயது மற்றும் கல்வித்தகுதிக்கான சான்று, விலைப்பட்டியல், திட்ட அறிக்கை நகல்களுடன் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
மானியம்அதன்பின்னர் விண்ணப்பதாரர்கள் தூத்துக்குடி பைபாஸ் ரோடு அருகே உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்திற்கு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். வங்கியில் இருந்து கடன் அனுமதி பெறும் பயனாளிக்கு ரூ.600 உதவித்தொகையுடன் கூடிய ஒரு வார கால கட்டாய மேலாண்மை பயிற்சி வழங்கப்படுவதுடன் தமிழக அரசின் 25 சதவீத மானியத்துடன் (அதிகபட்சம் ரூ.1¼ லட்சம்) கூடிய கடனுதவிகள் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் ஆயத்த ஆடைகள், ஹாலோ பிரிக்ஸ், ஸ்டீல் பேப்ரிகேசன், அழகுநிலையம், 2 மற்றும் 4 சக்கர வாகனம் பழுதுநீக்கம், செல்போன் சர்வீஸ், வணிக நிறுவனங்களும் தொடங்கலாம்.
பயனாளிகளின் பங்காக திட்ட முதலீட்டில் 5 சதவீதம் செலுத்த வேண்டும். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான 5 சதவீத பங்கு முதலீட்டு தொகையானது, தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் இருந்து பெற்று வழங்கப்படும். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த இளைஞர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.