இந்தியாவில் தொழில்துறை பின்னோக்கிசென்றது தான் மோடி அரசின் சாதனை - முன்னாள் எம்.பி. மாணிக்கம்தாகூர் பேட்டி


இந்தியாவில் தொழில்துறை பின்னோக்கிசென்றது தான் மோடி அரசின் சாதனை - முன்னாள் எம்.பி. மாணிக்கம்தாகூர் பேட்டி
x
தினத்தந்தி 24 Jun 2018 4:45 AM IST (Updated: 24 Jun 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் தொழில்துறை பின்னோக்கி சென்றது தான் மோடி அரசின் 4 ஆண்டு கால சாதனை என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் மாணிக்கம்தாகூர் கூறினார்.

சிவகாசி,

காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணவர் அமைப்புக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. இதில் 11 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் சின்னதம்பி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் எத்திராஜ் முன்னிலை வகித்தார். சென்னை மாவட்ட தலைவர் தீபன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான மாணிக்கம்தாகூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:–

வருங்கால இந்தியா இளைஞர்கள் கையில் தான் உள்ளது. மாணவர் சமுதாயம் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும். காங்கிரஸ் கட்சியில் தற்போது அதிகளவில் மாணவர்கள் இணைந்து வருகிறார்கள். இது பெரிய அளவில் மாற்றத்தை உருவாக்கும். எதிர்கால இந்தியாவை மாணவர்கள் தான் கொண்டு வர முடியும். தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்த நீங்கள் உங்கள் குடும்பத்தையும், படிப்பையும் பார்த்துக்கொள்ள வேண்டும். சமுதாய அக்கறை கொள்ள வேண்டும். உங்கள் தோழர்களையும் இந்த இயகத்துக்கு கொண்டு வாருங்கள். புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 100 உறுப்பினர்களை மாணவர் காங்கிரசில் சேர்க்க வேண்டும். அதற்கான பணிகளை நீங்கள் உடனே தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்களிடம் மாணிக்கம் தாகூர் கூறியதாவது:–

இந்தியாவில் மக்கள் விரோத அரசு நடக்கிறது. இந்த அரசு தூக்கி எறியப்பட வேண்டும். எப்போது தேர்தல் நடந்தாலும் மீண்டும் காங்கிரஸ் கட்சியை மத்தியில் ஆட்சியை பிடிக்கும். மோடி அரசு கடந்த 4 ஆண்டுகளில் தொழில்துறையை பின்னோக்கி கொண்டு சென்றது தான் சாதனை. இந்த அரசு அறிவித்த ஜி.எஸ்.டி, வரியால் லட்சக்கணக்காக தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்திலும் மக்கள் விரோத அரசு நடக்கிறது. பட்டாசு, தீப்பெட்டி உள்பட பல்வேறு தொழில்களை காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது. இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

இந்த கூட்டத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜாசொக்கர், சிவகாசி நகர பொறுப்பாளர் குமரன், அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மல்லீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காலையில் நடைபெற்ற இளைஞர்காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் அசன்மவுலானா, பொதுசெயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் உள்பட 11 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story