மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு: மானாமதுரையில் கிராமமக்களுடன் அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு: மானாமதுரையில் கிராமமக்களுடன் அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Jun 2018 4:00 AM IST (Updated: 24 Jun 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே அரசு மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்களுடன் சேர்ந்து அனைத்துக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மானாமதுரை,

மானாமதுரை பகுதியில் உள்ள வைகை ஆற்றுப்படுகையில் பொதுப்பணித்துறை சார்பில் அரசு மணல் குவாரி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை மற்றும் சூடியூர் இடையே இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. ஆனால் அங்கு குவாரி அமைந்தால் மானாமதுரை பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கலெக்டரிடமும் கோரிக்கை மனுவை ஏற்கனவே பொதுமக்கள் கொடுத்திருந்தனர். ஆனால் தொடர்ந்து மணல் குவாரி அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் மணல் குவாரி அமைப்பதை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி மானாமதுரை பேரூராட்சி அலுவலகம் எதிரே பொதுமக்கள் மற்றும் அனைத்துக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தெ.புதுக்கோட்டை, சூடியூர், இடைக்காட்டுர் உள்ளிட்ட பல்வேறு கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. மாரியப்பன்கென்னடி தலைமை தாங்கினார். தி.மு.க சார்பில் பொன்னுச்சாமி, அண்ணாதுரை, தொழில் அதிபர் முருகேசன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தங்கமணி, பா.ஜ.க மாவட்ட செயலாளர் கண்ணன், வர்த்தக சங்க செயலாளர் பாலகுருசாமி, ஓட்டல் சங்கம் சார்பில் ஸ்ரீதர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரய்யா, அனைத்து விவசாய சங்கங்கள் மாவட்ட செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மணல் குவாரி அமைப்பதை நிறுத்த வேண்டும், அவ்வாறு நிறுத்தவில்லை என்றால் அடுத்த கட்டமாக கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story