நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா: தேர்களை அலங்காரம் செய்யும் பணி மும்முரம்


நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா: தேர்களை அலங்காரம் செய்யும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 24 Jun 2018 3:30 AM IST (Updated: 24 Jun 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழாவையொட்டி தேர்களை அலங்காரம் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

நெல்லை, 

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழாவையொட்டி தேர்களை அலங்காரம் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

ஆனித்திருவிழா

நெல்லையப்பர் கோவிலில் ஆனித்தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்து வருகின்றன.

நெல்லையப்பர் கோவிலில் நெல்லையப்பர், காந்திமதி அம்மாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் என 5 தேர்கள் உள்ளன. வருகிற 27–ந் தேதி (புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

தேர்கள் தயார் செய்யும் பணி

தேரோட்டத்துக்கு தேர்கள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேரோட்டத்தின் போது தேர்கள் வேகமாக செல்வதை தடுக்க மரக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மரக்கட்டைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தேர்களுக்கு அழகான திரைச்சீலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், தேர்களில் அலங்கரித்து வைக்கப்படும் பொம்மைகள் தேரில் பொருத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. தேரோட்டத்துக்கு அனைத்து தேர்களும் தயாராகி வருகிறது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விழாவின் 5–ம் நாளான நேற்று காலை 8.30 மணிக்கு வெள்ளி ரி‌ஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டத்தையொட்டி நெல்லையப்பர் கோவிலில் 4 ரதவீதிகளிலும் குடிதண்ணீர், மருத்துவ வசதி உள்ளிட்டவைகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

தேரோட்டத்தையொட்டி 4 ரதவீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. கடை முன்பு உள்ள ஆக்கிரமிப்புகள் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது. இதற்கு ஒரு சில கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.


Next Story