பவானி அருகே கூலி வழங்கக்கோரி கைத்தறி நெசவாளர் சங்கம் முற்றுகை
கூலி வழங்கக்கோரி பவானி அருகே உள்ள கைத்தறி நெசவாளர் சங்கத்தை நெசவாளர்கள் முற்றுகையிட்டனர்.
பவானி,
பவானி அருகே குருப்பநாயக்கன்பாளையத்தில், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு மற்றும் விற்பனை சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் 140 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். சங்க மேலாளர் உள்பட 5 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த சங்கத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு நிலுவை கூலி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நெசவாளர்கள் நேற்று முன்தினம் நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் சங்கத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது நெசவாளர்கள் கூறுகையில், எங்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கூலி வழங்கப்படவில்லை. மேலும், நெசவுக்கு நூல் வழங்கப்படாததால் நெசவுக்கூடங்கள் அனைத்தும் வெறிச்சோடிக் கிடக்கின்றன. அதனால் உடனடியாக நிலுவை கூலியை வழங்க வேண்டும். மேலும், நெசவு நூல்களும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அரசின் விற்பனை மானியம் வந்தவுடன் நிலுவை கூலி வழங்கப்படும். மேலும் நூல்கள் வழங்க ஆவன செய்யப்படும் என்று கூறினார்கள். இதில் சமாதானம் அடைந்த நெசவாளர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.