8 வழி பசுமை சாலை சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக கோவை வரை நீட்டிக்கப்படும் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி


8 வழி பசுமை சாலை சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக கோவை வரை நீட்டிக்கப்படும் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி
x
தினத்தந்தி 24 Jun 2018 4:15 AM IST (Updated: 24 Jun 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

8 வழி பசுமை சாலை சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக கோவை வரை நீட்டிக்கப்படும் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி, மாநகர் மாவட்டம் மற்றும் பெரியார்நகர் பகுதி அ.தி.மு.க. சார்பில், காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஈரோடு செல்வகுமார சின்னையன் எம்.பி., கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அதைத்தொடர்ந்து தி.மு.க. கட்சியை சேர்ந்த 25 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இதில் முன்னாள் மேயர் மல்லிகாபரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, பகுதி செயலாளர் ஜெகதீசன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பி.பி.கே.மணிகண்டன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், போக்குவரத்து மண்டல செயலாளர் ஜீவா ராமசாமி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தெய்வநாயகம், முன்னாள் கவுன்சிலர் காவிரி செல்வம், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மண்டல தலைவர் மனோகரன் செய்திருந்தார்.

முன்னதாக அமைச்சர் கே.சி.கருப்பணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பவானிசாகர் அணை 90 அடியை எட்டிய உடன் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். வழக்கமாக ஆகஸ்டு மாதம் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மழை அதிக அளவில் பெய்தால் 10 நாட்களுக்கு முன்பாகவே தண்ணீர் திறக்கப்படும்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நன்றாக உள்ளது. சேலத்தில் 8 வழி பசுமை சாலையை கண்டித்து சமூக ஆர்வலர்கள் என்று கூறிக்கொண்டு சமூக விரோதிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அங்கு விவசாயிகள் யாரும் போராட்டம் நடத்தவில்லை. மேலும் சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக கோவை வரை 8 வழி பசுமை சாலை நீட்டிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.


Next Story