மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லை மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 155 பேர் கைது
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லை மாவட்டத்தில் 6 இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை,
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லை மாவட்டத்தில் 6 இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 155 பேரை போலீசார் கைது செய்தனர்.
மு.க.ஸ்டாலின் கைதுதமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு பணிக்கு சென்ற போது தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டினர். அப்போது கவர்னர் சென்ற கார் மீது கருப்பு கொடி மற்றும் கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டன. இதனை தொடர்ந்து தி.மு.க.வினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதை கண்டித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏராளமானவர்கள் சென்னையில் கவர்னர் மாளிகை முன்பு முற்றுகை போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆங்காங்கே தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்நெல்லை கிழக்கு மாவட்டம், மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் முன்னிலை வகித்தார். தி.மு.க.வினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், மு.க.ஸ்டாலினை விடுதலை செய்ய வேண்டும். நாமக்கல் மாவட்ட தி.மு.க.வினரை விடுதலை செய்ய வேண்டும். கவர்னரை கண்டிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பினர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, தொ.மு.ச. அமைப்பு செயலாளர் தர்மன், களக்காடு ஒன்றிய செயலாளர் பி.சி.ராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் பொன்னையா பாண்டியன், சுரேஷ், ராமகிருஷ்ணன் உள்பட 48 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் 3 பேர் பெண்கள் ஆவார்கள். கைது செய்யப்பட்டவர்கள் நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
பாளையங்கோட்டை பஸ்நிலையம் எதிரே உள்ள பெரியார் சிலை முன்பு மைதீன்கான் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட மைதீன்கான் எம்.எல்.ஏ., இளைஞர் அணி துணை செயலாளர் துரை, பகுதி செயலாளர் அண்ணாத்துரை உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாநகர பகுதியில் 2 இடங்களில் நடந்த தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சங்கரன்கோவில்சங்கரன்கோவில் தேரடி திடலில் நடந்த சாலை மறியலுக்கு மாநில பேச்சாளர் குமார் தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்ட முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜதுரை, நகர விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அஜய் மகேஷ்குமார், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சோமசெல்வபாண்டியன், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி குமார் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசையில் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாநில சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ரசாக், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் ஷெரீப், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கோமதிநாயகம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அழகுசுந்தரம், விவசாய அணி சாமித்துரை உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த மறியல் போராட்டத்தில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
155 பேர் கைதுநெல்லை மாவட்டத்தில் மொத்தம் 6 இடங்களில் நடந்த சாலை மறியலில் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 155 பேர் கைது செய்யப்பட்டனர்.