பட்டிவீரன்பட்டி அருகே விவசாயிகளின் பங்களிப்புடன் குளங்கள் தூர்வாரும் பணி
பட்டிவீரன்பட்டி அருகே விவசாயிகளின் பங்களிப்புடன் குளங்கள் தூர்வாரும் பணி நடக்கிறது. இதனை ஆர்.டி.ஓ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பட்டிவீரன்பட்டி,
பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம் வடக்கு ராஜவாய்க்கால் பகுதியில் செங்குளம், புதுக்குளம், நீச்சிமூப்பன்குளம், பாப்பாத்திகுளம், ஊடுஉசிலங்குளம் ஆகிய 5 குளங்கள் உள்ளன. இந்த குளங்களுக்கு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஓவாமலை, மட்டமலை போன்ற மலைப்பகுதிகளில் பெய்யும் மழை தண்ணீர் நீராதாரமாக விளங்குகிறது. இந்த குளங்கள் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால், தூர்ந்து போய் காட்சியளிக்கிறது.
மழைக்காலங்களில் இந்த குளங்களுக்கு வரும் தண்ணீரும், ஒரு சில நாட்களிலேயே வற்ற விடுகிறது. இதனால் ஒரு குளம் நிறைந்து மடகு வழியாக மற்ற குளங்களுக்கு தண்ணீர் செல்ல வழியின்றி வறண்டுபோய் காட்சியளிக்கின்றன. எனவே இந்த குளங்களை தூர்வாரி தண்ணீர் தேங்கி விவசாய நிலங்களில் நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக அய்யம்பாளையம் ஐந்தினை மக்கள் நலச்சங்கம் மற்றும் விவசாயிகள் முடிவு செய்தனர்.
இதையொட்டி ரூ.8 லட்சம் நிதி திரட்டி குளங்களை தூர்வார முன்வந்தனர். இதற்காக வருவாய்த்துறை அனுமதி பெற்று குளங்களை தூர்வாரும் பணியை தொடங்கினர். முதற்கட்டமாக புதுக்குளம், செங்குளம் தூர்வாரும் பணி நடக்கிறது. இந்த பணிகளை திண்டுக்கல் ஆர்.டி.ஓ. ஜீவா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆத்தூர் தாசில்தார் ராஜகோபால், வருவாய் ஆய்வாளர் சுமதி, ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயச்சந்திரன், ஐந்தினை மக்கள் நலச்சங்க தலைவர் கார்த்தி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து விவசாயிகள் சார்பில், ஆர்.டி.ஓ. ஜீவாவிடம் அளிக்கப்பட்ட மனுவில், அய்யம்பாளையம் வடக்கு வாய்க்கால் அருகே உள்ள குளங்களுக்கு தண்ணீர் வரும் நீர்வழிப்பாதை தற்போது ஆக்கிரமிப்பால் சுருங்கியுள்ளது. இதனால் மழைக்காலங்களில் வரும் காட்டாற்று தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் நீர்வழிப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கும் வகையில் தடுப்பணைகள் கட்டித்தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட ஆர்.டி.ஓ., நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை மூலமாக அளவீடு செய்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.