சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய, தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, விழுப்புரம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நடத்திய முற்றுகை போராட்டத்தின்போது சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. இதுதொடர்பாக, அந்த கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் தேசத்துரோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை கண்டித்து, கடந்த மாதம் திண்டுக்கல் அருகே டாஸ்மாக் மதுபான பாட்டில்களை ஏற்றி சென்று கொண்டிருந்த லாரியை அந்த கட்சியினர் தீ வைத்து எரித்தனர்.
இதுதொடர்பாக, வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்சி நிர்வாகிகளான திண்டுக்கல் என்.எஸ்.கே. நகரை சேர்ந்த அலெக்ஸ் (வயது 38), நெட்டுத்தெருவை சேர்ந்த மதன் (21), வேடசந்தூர் தாலுகா கரிக்காலியை சேர்ந்த முருகன் (31), பெருமாள்பட்டியை சேர்ந்த சந்தனதுரை (38) மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரை சேர்ந்த செந்தில் (34) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
பின்னர், அவர்கள் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு விழுப்புரம் அருகே சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கிலும் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் மூலம் கலெக்டர் டி.ஜி.வினய்க்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பேரில், அவர்களை கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் திண்டுக்கல் சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.