மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல்
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் உள்பட 489 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
நாமக்கல்லில் நேற்று முன்தினம் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டிய தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கையை கண்டித்தும், கவர்னர் பதவி விலக கோரியும் நேற்று சென்னையில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
இதனை கண்டித்தும் மு.க.ஸ்டாலினை உடனே விடுதலை செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரத்தில் நகர தி.மு.க. அலுவலகத்தில் இருந்து மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக வந்து காந்தி சிலை அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ராதாமணி எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் புகழேந்தி, நகர செயலாளர் சக்கரை, துணை செயலாளர் புருஷோத்தமன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத், ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, தெய்வசிகாமணி, பிரபாகரன், வக்கீல்கள் சுவை.சுரேஷ், ஏழுமலை உள்பட பலர் கலந்துகொண்டு, மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, ராதாமணி உள்பட 75 பேரை விழுப்புரம் நகர போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் கள்ளக்குறிச்சியில் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 43 பேரும், பகண்டை கூட்டுசாலையில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியலில் ஈடுபட்ட 55 பேரும், கூட்டேரிப்பட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட மாசிலாமணி எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் மயிலம் சேதுநாதன், மணிமாறன், ஒலக்கூர் ராஜாராம் உள்பட 50 பேரும், செஞ்சி கூட்டுரோட்டில் மறியலில் ஈடுபட்ட விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் துரை உள்பட 30 பேரும், ஒலக்கூரில் சீத்தாபதி சொக்கலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் மறியலில் ஈடுபட்ட 21 பேரும், உளுந்தூர்பேட்டையில் தி.மு.க. நகர செயலாளர் டேனியல் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 27 பேரும், சங்கராபுரத்தில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 40 பேரும், விக்கிரவாண்டியில் நகர செயலாளர் நயினாமுகமது தலைமையில் மறியலில் ஈடுபட்ட 21 பேரும், திருக்கோவிலூரில் ஒன்றிய செயலாளர் தங்கம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 30 பேரும், வளத்தியில் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 35 பேரும், கண்டாச்சிபுரத்தில் மாவட்ட பிரதிநிதி எத்திராஜ், மலையரசன் ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 16 பேரும், மூங்கில்துறைப்பட்டில் ஒன்றிய செயலாளர் முனியன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 25 பேரும், கிளியனூரில் மாவட்ட துணை செயலாளர் மைதிலி ராஜேந்திரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 21 பேரும் கைது செய்யப்பட்டனர்.
ஆக மொத்தம் விழுப்புரம் மாவட்டத்தில் 14 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் உள்பட 489 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.