தந்தையின் குடிப்பழக்கத்தால் விபரீதம்: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


தந்தையின் குடிப்பழக்கத்தால் விபரீதம்: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 Jun 2018 4:00 AM IST (Updated: 24 Jun 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

தந்தையின் குடிப்பழக்கத்தால் மனவேதனை அடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

புதுச்சேரி,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கே.ரெட்டியபட்டியைச் சேர்ந்த மாடசாமி மகன் தினேஷ் நல்லசிவம் (வயது 17). இவரது தந்தைக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. பலமுறை சொல்லியும் அவர் மது குடிக்கும் பழக்கத்தை நிறுத்தவில்லை. எனவே மது குடிக்கும் பழக்கத்தை நிறுத்தாத தனது தந்தையை கண்டித்தும், தமிழகத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரியும் கடிதம் எழுதி வைத்து விட்டு நெல்லையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் கடந்த மாதம் 2–ந் தேதி தினேஷ் நல்லசிவம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த மாணவரின் தந்தை மது பழக்கத்தை கைவிடுவதாக உறுதியளித்தார். தமிழகம் முழுவதும் பரிதாபத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை போல் புதுவையில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதன் விவரம் வருமாறு:–

புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் அருகே சுத்துக்கேணி காலனி பகுதியை சேர்ந்தவர் அய்யனார். கூலித்தொழிலாளி. இவரது மனைவி கலையரசி. இவர்களது மகள் தமிழரசி (வயது 24). இன்னும் திருமணம் ஆகவில்லை. அய்யனார், தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. எனவே மது குடிப்பதை நிறுத்தும்படி அய்யனாரிடம் நாள் தோறும் தமிழரசி வலியுறுத்தினார். ஆனால் மகளின் சொல்லை அலட்சியப்படுத்திய அவர் தொடர்ந்து மது குடித்து வந்தார்.

நேற்று முன்தினம் அய்யனார் மது குடித்துவிட்டு வந்து, மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் மனவேதனை அடைந்த தமிழரசி, தந்தையின் மது பழக்கத்தை நிறுத்த, தனது உயிரை மாய்த்துக்கொள்வது என்று முடிவு செய்தார்.

அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தமிழரசி சேலையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், தமிழரசி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தையின் மது பழக்கத்தை திருத்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சுத்துக்கேணி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story