கிணற்றுக்குள் மனைவியை தள்ளி கொலை செய்ய முயற்சி விவசாயிக்கு வலைவீச்சு


கிணற்றுக்குள் மனைவியை தள்ளி கொலை செய்ய முயற்சி விவசாயிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Jun 2018 3:45 AM IST (Updated: 24 Jun 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாடு அருகே கிணற்றுக்குள் மனைவியை தள்ளி கொலை செய்ய முயற்சித்த விவசாயியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரகத்திற்குட்பட்ட நெய்வேலி தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபோஸ். விவசாயி. இவருடைய மனைவி முத்துஜெயம்(வயது32). இவர்களுக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். சந்திரபோஸ், கடன் வாங்கியிருந்தார். இதனால் வீட்டு மனை நிலத்தை விற்று அந்த கடனை அடைக்க முயற்சித்துள்ளார்.

இதற்கு அவரது மனைவி முத்துஜெயம் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கடனை அடைக்க மாற்று வழிகளையும் கூறியுள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

உயிருக்கு போராடினார்

சம்பவத்தன்று காலை வழக்கம்போல் சந்திரபோஸ், தனது மனைவியை அவர்களது தோட்டத்திற்கு விவசாய வேலைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு முத்துஜெயம் வேலை செய்து கொண்டு இருந்தபோது சந்திரபோஸ், முத்துஜெயத்திடம், நீ உயிருடன் இருக்கும்வரை நான் நிலத்தை விற்று கடனை தீர்க்க முடியாது என்று கூறி முத்துஜெயத்தை அடித்து துன்புறுத்தியுள்ளார். பின்னர் அவரை அருகில் உள்ள தண்ணீர் இல்லாத 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தள்ளி விட்டதாக தெரிகிறது.

இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் அந்த பகுதியில் ஆடு, மாடு மேய்க்க சென்றவர்கள் முத்துஜெயம், கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுகுறித்து கறம்பக்குடி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வலைவீச்சு

இதனைத்தொடர்ந்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்று கிணற்றுக்குள் இருந்து முத்துஜெயத்தை மீட்டு, சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து முத்துஜெயம் அளித்த புகாரின்பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீசார், சந்திரபோஸ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story