11 முறை ஆய்வு செய்தும் எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை: ஆலோசனை கூட்டத்தில் கவர்னர் கிரண்பெடியிடம் சரமாரி கேள்வி


11 முறை ஆய்வு செய்தும் எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை: ஆலோசனை கூட்டத்தில் கவர்னர் கிரண்பெடியிடம் சரமாரி கேள்வி
x
தினத்தந்தி 24 Jun 2018 5:15 AM IST (Updated: 24 Jun 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

பாகூர் பகுதியில் 11 முறை ஆய்வு செய்தும் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்று கவர்னர் கிரண்பெடியிடம் விவசாயி சரமாரியாக கேள்வி எழுப்பியதால் ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பாகூர்,

பாகூர் மூலநாதர் கோவிலுக்கு சொந்தமான குளங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பது குறித்து கவர்னர் கிரண்பெடிக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கவர்னர் கடந்த மே மாதம் குளத்தை பார்வையிட்டு, ஸ்மார்ட் பாகூர் திட்டத்தின் கீழ் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கவர்னர் கிரண்பெடி நேற்று காலை 6.30 மணிக்கு பாகூர் மூலநாதர் கோவில் குளத்தை மீண்டும் ஆய்வு செய்ய வந்தார். குளத்தில் குப்பைகளும், கழிவுநீரும் அகற்றப்படாமல் இருப்பதை கண்ட அவர், அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். தொடர்ந்து, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த, ஸ்மார்ட் பாகூர் திட்டம் தொடர்பாக ஆய்வு கூட்டத்தில் கவர்னர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் துணை கலெக்டர் உதயகுமார், உள்ளாட்சி துறை இயக்குனர் மலர்கண்ணன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன், வட்டார வளர்ச்சி அதிகாரி மலர், பொதுப்பணித்துறை அதிகாரி தாமரை புகழேந்தி, மின்துறை உதவி பொறியாளர் கண்ணன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், ஸ்மார்ட் பாகூர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்ட பணிகள் குறித்து துறை வாரியாக அதிகாரிகள் விளக்கினர். இதில், சுற்றுலாத்துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்பட சில துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்காதது குறித்து கவர்னர் கேள்வி எழுப்பினர். அடுத்து நடைபெறும் கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறினார்.

கூட்டத்தின்போது, விவசாயி ஒருவர் பாகூர் ஏரியில் மீன்பிடி குத்தகை தொடர்பாக வழக்கு இருந்து வரும் நிலையில், சிலர் மீன்களை பிடித்து விற்பனை செய்வதாக புகார் தெரிவித்தார். இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட கவர்னர், வழக்கு முடிவுக்கு வரும் வரை மீன் பிடிக்க அனுமதிக்க கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு, தோட்டக்கலை சாகுபடி தொடர்பாக தனியார் பங்களிப்புடன் பயிற்சி அளிப்பது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டார். கூட்டத்தில் அவர் பேசுகையில், ஸ்மார்ட் பாகூர் திட்டத்தில், நீர்நிலை மேலாண்மைக்கு முக்கியத்துவம் தரப்படும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இப்பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி பராமரித்து, தண்ணீரை சேமித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மகளிர் குழுவினரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில், வேளாண் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அரசு என்பது பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. முகம் தெரியாமல் இருந்த அரசாங்கத்தை, அதிகாரிகளை உங்கள் முன் நிறுத்தி முகம் தெரியும் வகையில் செய்துள்ளோம். மீண்டும் இது தொடர்பாக ஆய்வு கூட்டம் ஜூலை மாதம் 21–ந் தேதி நடைபெறும் என்றார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர், இதுவரை பாகூர் பகுதியில் 11 முறை ஆய்வு செய்திருக்கிறீர்கள், ஆனால், எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இப்போது, ஸ்மார்ட் பாகூர் திட்டம் என்ற பெயரில் ஆய்வு பணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்திற்கு எம்.எல்.ஏ.,வை ஏன் அழைக்கவில்லை என கேள்வி கேட்டார்.

அதற்கு கவர்னர் கிரண்பெடி, இந்த கூட்டம் மகளிர் குழுவினருக்கான கூட்டம் என பதில் கூறினார். அதற்கு அந்த நபர், அப்படியானால் மற்றவர்களை ஏன் பங்கேற்க அழைத்தீர்கள் என மீண்டும் கேள்வி எழுப்பினார். உடனே அங்கிருந்த போலீசார் அவரை வலுக்கட்டாயமாக உட்காரவைக்க முயற்சித்தனர். ஆனாலும், அவர் விடாமல் ஆவேசமாக பேசியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால், கோபமடைந்த கவர்னர் கிரண்பேடி, அந்த நபரின் அருகே சென்று, கேள்விகளுக்கு பதில் கூறுகிறேன், உட்காருங்கள் என்று கூறினார். இதையடுத்து அந்த நபர் அமைதியானார். கவர்னர் கிரண்பெடியிடம் விவசாயி ஒருவர் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆய்வு கூட்டத்தை முடித்து கொண்டு கவர்னர் கிரண்பெடி புதுவைக்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.


Next Story