மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைக்குழந்தை திடீரென இறந்ததால் உறவினர்கள் சாலைமறியல்


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைக்குழந்தை திடீரென இறந்ததால் உறவினர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 24 Jun 2018 5:00 AM IST (Updated: 24 Jun 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கைக்குழந்தை திடீரென இறந்ததால் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்,

அரக்கோணம் காழிவாரிகண்டிகை ஷாநகர் பகுதியை சேர்ந்தவர் மேத்யூ (வயது 28). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெமி (26). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பால்ஜோஸ்வா என்று பெயரிட்டனர்.

இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பால்ஜோஸ்வாவை சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை திடீரென பால்ஜோஸ்வா இறந்து விட்டான். ஆத்திரமடைந்த அவனது பெற்றோர், உறவினர்கள் திடீரென ஆற்காடு சாலைக்கு வந்து அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குழந்தையின் உறவினர்கள் கூறுகையில், “பால்ஜோஸ்வாவுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் நாங்கள் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தோம். அவனுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று நாங்கள் கருதுகிறோம். இந்த நிலையில் நேற்று குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று தெரிவித்தனர். அவர்கள் கூறிய சிறிது நேரத்தில் பால்ஜோஸ்வா இறந்து விட்டான். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story