அண்டை மாநிலங்களின் அழுத்தத்திற்கு பணிந்து காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
அண்டை மாநிலங்களின் அழுத்தத்திற்கு பணிந்து காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
பெங்களூரு,
அண்டை மாநிலங்களின் அழுத்தத்திற்கு பணிந்து காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையம்காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவரி ஒழுங்காற்று குழுவிற்கான தலைவர்கள், உறுப்பினர்களையும் நேற்று முன்தினம் மத்திய அரசு அமைத்ததுடன், அதற்கான அரசாணையையும் வெளியிட்டது.
இதுகுறித்து தார்வார் மாவட்டம் உப்பள்ளி விமான நிலையத்தில் கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது;
– அழுத்தத்திற்கு பணிந்து...காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரியை முதல்–மந்திரி குமாரசாமி தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசி சில கோரிக்கைகளை வைத்தார். நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் முதல்–மந்திரி தெரிவித்து இருந்தார். ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதற்கு முன்பாக கர்நாடக அரசுடன் மத்திய அரசு ஆலோசிக்கவில்லை. கர்நாடக அரசுடன் ஆலோசிக்காமலேயே ஒருதலைபட்சமாக முடிவு எடுத்து மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்திருக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவு சரியானதல்ல.
இந்த விவகாரத்தில் அண்டை மாநிலங்கள் கொடுத்த அழுத்தத்திற்கு பணிந்து காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசே அமைத்துள்ளது. முதல்–மந்திரி குமாரசாமி வைத்த கோரிக்கைகளை பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்கிறது. சுப்ரீம் கோர்ட்டு மீது அனைவருக்கும் மரியாதை உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கர்நாடகமும் பின்பற்றி வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளதால் கர்நாடகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சட்டவல்லுனர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.