விருந்தில் 5 பேர் பலியான சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பம் உணவில் விஷம் கலந்ததாக உறவுப்பெண் கைது
ராய்காட் அருகே விருந்து நிகழ்ச்சியில் சாப்பிட்ட 5 பேர் பலியான சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பமாக உணவில் விஷம் கலந்ததாக உறவுப்பெண் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
ராய்காட் அருகே விருந்து நிகழ்ச்சியில் சாப்பிட்ட 5 பேர் பலியான சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பமாக உணவில் விஷம் கலந்ததாக உறவுப்பெண் கைது செய்யப்பட்டார்.
5 பேர் பலி
ராய்காட் மாவட்டம் காலாப்பூர் மகாட் பகுதியில் சுபாஷ் மானே என்பவர் வீட்டில் புதுமனை புகுவிழாவையொட்டி கடந்த 18-ந் தேதி விருந்து பரிமாறப்பட்டது. விருந்து சாப்பிட்ட குழந்தைகள் உள்பட சுமார் 80 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதில் சிகிச்சை பலனின்றி 2 சிறுமிகள், 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் விருந்தில் பரிமாறப்பட்ட உணவில் யாராவது விஷத்தை கலந்து இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர்கள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விஷம் கலந்த பெண்
இதில் சம்பவத்தன்று உணவு பரிமாறிய சுபாஷ் மானேயின் உறவினரான பிரதன்யா (வயது 28) என்ற பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர் விருந்தில் பரிமாறப்பட்ட பருப்பு குழம்பில் பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) கலந்ததாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.
சுபாஷ் மானேயின் அக்காள் மகனுக்கும், பிரதன்யாவிற்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. திருமணம் நடந்த நாள் முதல் பிரதன்யாவை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி உள்ளனர்.
கருப்பாக இருப்பதாக கூறி அவமானம்
மேலும் அவர்கள் பிரதன்யா கருப்பாக இருப்பதாக கூறி அவமானப்படுத்தி உள்ளனர். இதனால் பிரதன்யா கணவர் குடும்பத்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்து விருந்து உணவில் விஷத்தை கலந்து உள்ளார்.
இதையடுத்து போலீசார் பிரதன்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story