விதிமுறைகளை மீறி மணல் எடுப்பதை கண்டித்து லாரிகள் சிறைபிடிப்பு


விதிமுறைகளை மீறி மணல் எடுப்பதை கண்டித்து லாரிகள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 24 Jun 2018 4:05 AM IST (Updated: 24 Jun 2018 4:05 AM IST)
t-max-icont-min-icon

நெய்தவாயல் ஏரியில் விதிமுறைகளை மீறி சவுடுமண், மணல் எடுப்பதை கண்டித்து லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

மீஞ்சூர்,

மீஞ்சூர் அருகே நெய்தவாயல் கிராமத்தில் 853 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த ஏரியை கனிம வளத்துறை சார்பில் ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி சவுடுமண் எடுக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த ஏரியில் மணல் கிடைப்பதால் விதிமுறைகளை மீறி 30 அடி ஆழத்திற்கு மணல் எடுப்பதாக கூறப்படுகிறது. இந்த ஏரியில் சவுடுமண் மற்றும் மணல் ஆகியவற்றை லாரிகளில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது சரிந்து கீழே விழுவதால் புழுதி பரவுகிறது.

புழுதியால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர். காற்றில் பறந்து வீடுகளுக்கும் பரவுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் சவுடுமண் மற்றும் மணல் ஏற்றிச் செல்லப்படுகிறது. அவ்வாறு செல்லும் போது மீஞ்சூர் ரெயில்வே கேட் மூடப்படும் போதெல்லாம் சாலையில் நீண்ட வரிசையில் லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

20 நாட்களுக்கு மேலாக இதே நிலை நீடிக்கிறது. மேலும் அனுமதி வழங்கப்பட்ட நேரத்தை விட அதிகாலையிலும், இரவு முழுவதும் லாரிகளில் மண் எடுத்து செல்லப்படுகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் நெய்தவாயல், அரியன்வாயல், மீஞ்சூர் பகுதி பொதுமக்கள் ஒன்று கூடி நேற்று காலை நெய்தவாயல் ஏரிக்கு செல்லும் வழியான மீஞ்சூர்-காட்டூர் நெடுஞ்சாலையில் மண் எடுத்து செல்லும் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

அதேபோல் தத்தைமஞ்சி ஏரியில் சவுடுமண் குவாரி மூலம் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் சவுடுமண் கொண்டு செல்லப்படுகிறது. நெய்தவாயல் ஏரியில் மண் எடுக்கும் இடத்திலும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இதனால் சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் லாரிகள் அணி வகுத்து நின்றன. நெய்தவாயல் ஏரியில் 200-க்கும் மேற்பட்ட லாரிகள் சிறைப்பிடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரஞ்சித்குமார், குமார் உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

நெய்தவாயல் ஏரியில் அரசு விதிகளை மீறி, அதிக ஆழத்தில் மண் மற்றும் மணல் எடுப்பதை தடுக்க வேண்டும். காலை 9 மணிக்கு மேல் சவுடுமண் மட்டும் எடுத்து செல்வதுடன் லாரியின் மேற்பரப்பில் தார்பாய் விரித்து மண் கீழே விழாத வகையில் கொண்டு செல்ல வேண்டும்.

பொதுமக்களுக்கு, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாத வகையில் கொண்டு செல்ல வேண்டும். இரவு நேரங்களில் மண் எடுக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர். பின்னர் பொன்னேரி வருவாய்துறை சார்பில் மண்டல தாசில்தார் அருள்வளவன், மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் மண் எடுக்கப்படும் ஏரி பகுதிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதிக ஆழத்தில் விதிமுறைகளை மீறி மண் எடுப்பதை தற்காலிகமாக நிறுத்துவதாக உடன்பாடு ஏற்பட்டது. பின்னர் ஏரியில் சிறைபிடிக்கப்பட்ட லாரிகளை போலீசார் விடுவித்தனர்.

Next Story