மாநில சுயாட்சி பற்றி பேச ஸ்டாலினுக்கு உரிமை இல்லை: திருப்பூரில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


மாநில சுயாட்சி பற்றி பேச ஸ்டாலினுக்கு உரிமை இல்லை: திருப்பூரில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 24 Jun 2018 5:15 AM IST (Updated: 24 Jun 2018 4:15 AM IST)
t-max-icont-min-icon

மாநில சுயாட்சி பற்றி பேச ஸ்டாலினுக்கு உரிமை இல்லை என்று திருப்பூரில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

திருப்பூர், 

பா.ஜனதா கட்சியின் திருப்பூர் தெற்கு சட்ட மன்ற தொகுதி மற்றும் மாவட்ட இளைஞர் அணி சார்பில் மத்திய அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தாராபுரம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு தொகுதி அமைப்பாளர் காடேஸ்வரா தங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி தலைவர் பிரதீப் வரவேற்று பேசினார்.

மாவட்ட தலைவர் சின்னசாமி, கோட்ட இணை பொறுப்பாளர் பாயிண்ட் மணி, இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய இளைஞர் அணி தலைவர் பூனம் மகாஜன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

கூட்டத்தில் பூனம் மகாஜன் பேசும்போது கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி பெண்கள் முன்னேற்றம், வளர்ச்சி, பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெண்கள் முன்னேற்றம் தான் சமுதாய முன்னேற்றம். பெண்களை தெய்வமாக வழிபடும் நாடு நமது நாடு. பெண்கள் அனைவரும் அமைதியாய் வாழ தமிழகத்தில் தாமரை மலர வேண்டும். பெண்களுக்கான செல்வமகள் திட்டம், உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச கியாஸ் இணைப்பு திட்டம், வங்கி கணக்கு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு தேர்தல் வரும் போது இன்னொரு அமைச்சர் நிச்சயம் தமிழகத்தில் இருந்து வருவார். தமிழகத்தில் தாமரை மலரும். வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழகம் மாறும். தமிழகத்தில் உள்ள உதயசூரியனாக இருக்கும் கட்சி மறைந்த சூரிய கட்சியாகவும், காங்கிரஸ் கட்சி குடும்ப கட்சியாகவும் மாறிவிட்டது. மேலும், ஒரே அணியாக இருந்து தற்போது பல அணிகளாக பிரிந்து கிடக்கும் கட்சி என பல தரப்பட்ட கட்சிகள் தமிழகத்தில் உள்ளன. இதில் பலர் தன்னை சூப்பர் ஸ்டார் என்று கூறிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் ஒரே சூப்பர் ஸ்டார் நமது பிரதமர் நரேந்திர மோடி தான். பல ஆண்டுகளாக இந்த திராவிட கட்சிகளால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை. இதன்காரணமாக தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி மலரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மாநில சுயாட்சி பற்றி...

தமிழக கவர்னரின் நடவடிக்கையால் மாநில சுயாட்சிக்கு எந்த விதத்திலும் பங்கம் இல்லை. மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. கவர்னர் ஒரு நல்ல அனுபவசாலி. அவர் தமிழகத்தில் ஆய்வு நடத்துவதில் மு.க.ஸ்டாலினுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது. அப்படி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றால், ஆளும் கட்சியினர் தான் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் கவர்னர்கள் மக்களுக்கு நேரடியாக உதவி செய்து வருகின்றனர். அது போல தான் தமிழகத்திலும் நடைபெறுகிறது. மாநில சுயாட்சியை பற்றி பேசும் மு.க.ஸ்டாலின் பிற மாநில தலைவர்களான மம்தாபானர்ஜி, சந்திரசேகரராவ், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டவர்களை சென்று சந்திக்கிறார்.

இதனால் மாநில சுயாட்சி பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு உரிமை இல்லை. அவர்களிடம் ஆட்சி அதிகாரமும் இல்லை. இதனால் எந்த விதத்திலும் மாநில சுயாட்சிக்கு பங்கம் விளைவிக்கவில்லை. பா.ஜனதா கட்சி ஜனநாயகத்தை மதிக்கும் கட்சி. கவர்னரும் ஜனநாயகத்தை மதிப்பவர். இதனால் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள் தேவையில்லாத ஒன்று.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story