கூடலூர் நகராட்சி வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த தடை
கூடலூர் நகராட்சி வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கூடலூர்,
கேரளா, கர்நாடகா, தமிழகம் ஆகிய 3 மாநிலங்கள் இணையும் பகுதியில் கூடலூர் நகராட்சி அமைந்து உள்ளது. மைசூருவில் இருந்து கூடலூர் வழியாக தேசிய நெடுஞ்சாலையும், கூடலூரில் இருந்து பெருந்தல்மன்னா, சுல்தான்பத்தேரி பகுதிகளுக்கு நெடுஞ்சாலையும் செல்கிறது. 3 மாநிலங்கள் சந்திக்கும் பகுதி என்பதால், கூடலூர் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் வாகன நெரிசலால் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியாக உள்ளது.
கூடலூர் பகுதியில் வசித்து வரும் உள்ளூர் மக்களின் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு கூடலூர் நகரில் போதிய இடவசதி இல்லை. கூடலூர் பழைய மற்றும் புதிய பஸ் நிலைய பகுதியில் இருசக்கர வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டு வந்தது. அதேபோல் சுற்றுலா வாகனங்கள், ஆட்டோ, ஜீப் ஆகியவை சாலையோரம் நிறுத்தப்பட்டது.
வணிக வளாகத்தில் நிறுத்த தடை
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் பகுதிகளில் சாலையோரம் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு போக்குவரத்து போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால், 4 சக்கர வாகனங்கள் சாலையோரம் நிறுத்த தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டது. இதனால் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் நிறுத்த இடம் இல்லாமல் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். போக்குவரத்து போலீசாரின் நெருக்கடியை சமாளிக்க முடியாத வாகன ஓட்டிகள் கூடலூர்-ஊட்டி சாலையில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தில் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி வந்தனர்.
அப்பகுதியில் அதிகமான வாகனங்களை நிறுத்தியதால், வணிக வளாகத்தில் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் புகார் தெரிவித்து கூடலூர் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். அதனை தொடர்ந்து நகராட்சி கமிஷனர் பார்வதி தலைமையிலான நகராட்சி அலுவலர்கள் வணிக வளாகத்தில் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை நிறுத்த தடை விதித்தனர். மேலும் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களை உடனடியாக நகராட்சி பணியாளர்களை கொண்டு வளாகத்தை விட்டு வெளியே கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டது. இனிவரும் காலங்களில் தடையை மீறி வணிக வளாகத்திற்குள் வாகனங்களை நிறுத்தினால், வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
Related Tags :
Next Story