பந்தலூர் அருகே பிறந்து 2 நாட்களேயான சிறுத்தைப்புலி குட்டிகள் வீட்டிற்குள் இருந்ததால் பரபரப்பு


பந்தலூர் அருகே பிறந்து 2 நாட்களேயான சிறுத்தைப்புலி குட்டிகள் வீட்டிற்குள் இருந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Jun 2018 4:47 AM IST (Updated: 24 Jun 2018 4:47 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே பிறந்து 2 நாட்களேயான சிறுத்தைப்புலி குட்டிகள் வீட்டிற்குள் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பந்தலூர்,

பந்தலூர் அருகே செம்மண்வயல் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதிக்கு அடிக்கடி காட்டு யானைகள், சிறுத்தைப்புலி உள்ளிட்ட வன விலங்குகள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் சிறுத்தைப்புலி நடமாடுவதை கண்டு பொதுமக்கள் பீதி அடைந்தனர். அதே பகுதியை சேர்ந்த அருக்காணி என்பவர் புதியதாக வீடுகட்டி வருகிறார்.

நேற்று காலை அருக்காணி புதிய வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் அறைக்குள் 2 சிறுத்தைப்புலி குட்டிகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

வனத்துறையினர் அறிவுரை

இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா வனச்சரகர் சரவணன், வனக்காப்பாளர் மில்டன் பிரபு, லூயிஸ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அங்கு 2 சிறுத்தைப்புலி குட்டிகள் கிடப்பதை உறுதிசெய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தாய் சிறுத்தைப்புலி எங்கு சென்றது என்பது தெரியவில்லை. தாய் சிறுத்தைப்புலியை கண்டறியும் வகையில் சிறுத்தைப்புலி குட்டிகளை அங்கேயே விட்டுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தைப்புலி குட்டி ஈன்று இருக்கும் என்று கருதப்படுகிறது. அந்த சிறுத்தைப்புலி இந்த வீட்டில் குட்டியை ஈன்றதா? அல்லது வேறு இடத்தில் குட்டியை ஈன்று இங்கு கொண்டு வந்து போட்டுள்ளதா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் தனது குட்டிகளை தேடி இப்பகுதிக்கு வர வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்லக்கூடாது என்றும், விழிப்புடன் இருக்கவும் வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர். 

Next Story