உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 24 Jun 2018 5:01 PM IST (Updated: 24 Jun 2018 5:01 PM IST)
t-max-icont-min-icon

அவள் மிகவும் அமைதியானவள். மற்றவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற கருணை எண்ணமும் கொண்டவள். ஆனால் தனிமையை அதிகம் விரும்பினாள்.

பெற்றோரிடம்கூட அளவோடுதான் அவள் பேசுவாள். உறவினர்களிடமும் ஒட்டிக்கொள்ளமாட்டாள். நெருக்கமான தோழிகளையும் உருவாக்கிக் கொள்ளவில்லை. எப்போதும் புத்தகமும் கையுமாக இருந்து, பள்ளிக்காலத்தி்ல் நிறைய மதிப்பெண்கள் பெற்றுக் கொண்டிருந்தாலும், ‘காலம் முழுக்க இவள் தனிமை விரும்பியாக இருந்துவிடுவாளோ?’ என்ற கவலை அவளது பெற்றோருக்கு இருந்துகொண்டே இருந்தது.

அவள் பள்ளி இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது, அதே பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன் அவளுக்கு அறிமுகமானான். இருவருக்கும் சம வயது. அவனை அவளுக்கு ரொம்பவும் பிடித்துப்போய்விட்டது. கலகலப்பான சுபாவமும், வேடிக்கையான பேச்சும் கொண்டவனாக அவன் இருந்தான். யாரிடமும் ஒட்டிக்கொள்ளாத அவள் அவனிடம் எளிதாக ஒட்டிக்கொண்டாள். அவனிடம் மட்டும் நெருக்கமாகவும் பழகினாள். அதன் பின்பு அவள் சுபாவத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு மகிழ்ச்சியாகவும் வலம் வந்தாள்.

இன்னொரு ஆணுடன் மகள் நெருக்கமாக பழகுவதை பொதுவாக டீன் ஏஜ் மகளின் பெற்றோர் விரும்பமாட்டார்கள். ஆனால் அவளது பெற்றோரோ, தங்களது தனிமை விரும்பியான மகளிடம் பெரிய மாற்றத்தை உருவாக்கியதால், அவனோடு பழக அனுமதித்தார்கள். அவன், அவளது வீட்டிற்கு வருவான். வீட்டில் உள்ள அனைவரிடமும் பேசுவான். அவர்களது நட்பு தொடர்ந்தது.

பள்ளி படிப்பு முடிந்து, இருவரும் வெவ்வேறு கல்லூரிகளில் படிக்கச் சென்றார்கள். அப்போது முன்பைவிட அவர்களது நட்பு இறுக்கமானது. கல்வி ரீதியான வேலைகளுக்கு அவனது பைக்கில் அவள் செல்லத் தொடங்கினாள். அவளை பைக்கிலே வீட்டில் கொண்டுவந்து இறக்கிவிட்டான். அக்கம்பக்கத்தினருக்கு அது முகச்சுளிப்பை ஏற் படுத்தினாலும், அவளது பெற்றோர் அந்த நெருக்கத்தை எதிர்க்கவில்லை. அவனது வீட்டிலும் அந்த நட்பை ஏற்றுக்கொள்ளும் விதத்தில்தான் இருந்தார்கள். படிப்பு முடிந்து வேலைக்கு சேர்ந்்த பின்பும் அவர்களது நட்பு தொடர்கிறது.

‘அந்த இளைஞனோடு மகள் பலவருடங்களாக நெருக்கமாக இருப்பதால் அவனையே திருமணம் செய்துகொள்வாள்’ என்று நினைத்த அவளது பெற்றோருக்கு ஏமாற்றமாகிவிட்டது. ‘எங்கள் நட்பை கொச்சைப்படுத்தாதீர்கள். நாங்கள் வெறும் நண்பர்கள்தான்’ என்று அவன் ஐந்தாண்டுகளாக கூறிக்கொண்டிருக்கிறான். அவனது பெற்றோரிடம், அவளது வீட்டார் பேசியபோதும், ‘அவர்கள் வெறும் நண்பர்கள்தான். காதலர்கள் இல்லை. அதனால் இருவரும் கல்யாணம் செய்துகொள்ள வாய்ப்பில்லை’ என்று கூறி நைசாக ஒதுங்கிக்கொண்டார்கள். இப்போது அவள் வயது 30 ஆகிவிட்டது.

பெற்றோர் அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்துவைக்க முயற்சி செய்தார்கள். அதற்கு அவள் சம்மதிக்கவில்லை. ‘நான் வேறு திருமணம் செய்துகொண்டால் என் நண்பனுடனான உறவுக்கு முடிவுகட்டவேண்டியதாகி விடும். அதனால் திருமணம் வேண்டாம். நான் இப்படியே இருந்துவிட்டுப்போகிறேன். அவனுடனான நட்பு மட்டும் எனக்குப்போதும்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள்.

அந்த நட்புக்கு என்ன அர்த்தம் என்றும் புரியாமல், அவளது எதிர்காலம் என்ன ஆகும் என்றும் தெரியாமல் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள், அவளது பெற்றோர்!

- உஷாரு வரும். 

Next Story