வாலிபர் கத்தியால் குத்திக்கொலை காதல் தகராறு காரணமா? போலீசார் விசாரணை


வாலிபர் கத்தியால் குத்திக்கொலை காதல் தகராறு காரணமா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 25 Jun 2018 4:45 AM IST (Updated: 25 Jun 2018 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதற்கு காதல் தகராறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜீயபுரம்,

திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் அருகே உள்ள கணவனூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் விஜய்(வயது 23). இவர் மோட்டார் மெக்கானிக் பட்டய படிப்பு படித்துவிட்டு, திருச்சியை சேர்ந்த ஒரு தனியார் ஒப்பந்ததாரரிடம் தற்காலிகமாக ரெயில் சிக்னல் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை பழூர் செல்லும் சாலையில் நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் விஜய் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதைக்கண்டு ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜன் மற்றும் போலீசார் விஜய்யை மீட்டு, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், விஜய் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு(பொறுப்பு) சிவசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், விஜய்யும் ஒரு பிளஸ்-2 மாணவியும் காதலித்து வந்தனர். இது பற்றி அறிந்த 2 பேரின் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் பழூரை சேர்ந்த விஜய்யின் நண்பர் தனது பிறந்த நாள் விழாவிற்காக, விஜய்யை அழைத்துள்ளார். அதில் பங்கேற்க விஜய் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பழூர் சாலையில் 3 பேர் அவரை வழிமறித்து கத்தியால் குத்தியது, தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதனால் காதல் தகராறில் விஜய் கொலை செய்யப்பட்டாரா? அல்லது விஜய் கொலை செய்யப்பட்டதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story