புதிதாக தொழில் தொடங்குபவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து அரசின் அனுமதியை விரைவாக பெறலாம்


புதிதாக தொழில் தொடங்குபவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து அரசின் அனுமதியை விரைவாக பெறலாம்
x
தினத்தந்தி 24 Jun 2018 10:15 PM GMT (Updated: 24 Jun 2018 7:16 PM GMT)

புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து அரசின் அனுமதியை விரைவாக பெறலாம் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்,

தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வரும் தொழில் முனைவோர், படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்க இணையதள தகவுகள் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தொழில் உரிமங்கள் மற்றும் அனுமதியை விரைவாக பெற்று தருவதற்கு பெரம்பலூர் மாவட்ட தொழில் மைய அலுவலகம் மூலம் ஒரு முனை தீர்வு குழு வாயிலாக விரைந்து பெற்று அளித்திட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதை எளிமையாக்குவதற்கு தொழில்துறை மூலம் ஒருங்கிணைந்த இணையதள வழி ஒற்றை சாளர தகவு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த தகவினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் தேவையான மாற்றங்கள் செய்து, கூடுதலாக சுகாதாரத் துறையிடம் இருந்து பெற வேண்டிய தடையில்லாச் சான்றிதழ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையினரிடம் இருந்து பெற வேண்டிய உரிமம் மற்றும் மின் வாரியத்திடம் இருந்து பெற வேண்டிய குறைந்த அழுத்த மின் இணைப்பு ஆகியவற்றுக்கான சேவைகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள ஒற்றை சாளர தகவு https://easy-bus-i-ness.tn.gov.in/msme அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது.

இதன்மூலம் தொழில் முனைவோர்கள், அரசுத்துறைகளிடம் இருந்து பெற வேண்டிய உரிமங்கள், தடையில்லா சான்றுகள், ஒப்புதல்கள் போன்றவைகளை அந்தந்த அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும் தமிழ்நாடு அரசு, இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்காக செயல்படுத்தி வரும் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் ஆகிய இரு திட்டத்தின் கீழ் பயனாளிகள் தங்களுடைய விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை இணையதளத்தின் வாயிலாக பதிவேற்றம் செய்து கொள்ள ஏதுவாக மேம்படுத்தப்பட்ட www.msm-e-o-n-l-i-ne.tn.gov.in/uye-gp மற்றும் www.msm-e-o-n-l-i-ne.tn.gov.in/ne-eds தகவு அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது.

எனவே, பயனாளிகள் அனைவரும் மேற்கூறிய திட்டங்களில் இணையதளத்தில் விண்ணப்பித்து விண்ணப்ப நகல்களை பெரம்பலூர் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் ஒப்படைத்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

Next Story