கோவை உக்கடம் பகுதியில் குடிசை பகுதிகளுக்கு பாதிப்பின்றி மேம்பாலம் கட்ட வேண்டும், தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்


கோவை உக்கடம் பகுதியில் குடிசை பகுதிகளுக்கு பாதிப்பின்றி மேம்பாலம் கட்ட வேண்டும், தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 25 Jun 2018 4:30 AM IST (Updated: 25 Jun 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

கோவை உக்கடம் பகுதியில் உள்ள குடிசை பகுதிகளுக்கு பாதிப்பின்றி மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை,

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வடகோவை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

கோவை கரும்புக்கடையில் இருந்து மேம்பால பணிகளை தொடங்கினால் இது காந்திபுரம் மேம்பாலம் போல பலனற்றதாகி விடும். எனவே ஆத்துப்பாலத்தில் இருந்து மேம்பால கட்டுமான பணிகளை தொடங்க அரசு முன் வரவேண்டும்.

மேலும் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு வரும் போது உக்க டம் சந்திப்புக்கு மேற்கு புறமாக உள்ள குடிசைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் 70 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். அந்த குடிசை பகுதிகளுக்கு பாதிப்பின்றி, அவர்களுடைய வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் மேம்பாலம்கட்ட வேண்டும்.

கோவை மாநகராட்சியில் குடிநீர் வினியோகம், சூயஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டு உள்ளது. அந்த நிறுவனம் நிர்ணயிக்கும் அளவிற்கு பணத்தை செலுத்த முடியாதவர்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் அபாய நிலை ஏற்படும். இதற்கு அரசும், மாநகராட்சி நிர்வாகமும் தகுந்த விளக்கத்தை மக்களிடம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

கடந்த 2010-ம் ஆண்டு கோவையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டையொட்டி அமைக்கப்பட்ட பூங்காக்களை மாநகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் உள்ளது. எனவே உடனடியாக ஒப்பந்த பணியாளர்களை நியமித்து பூங்காக்களில் துப்புரவு பணிகளையும், பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்காக்களின் பராமரிப்பை உறுதி செய்ய வேண்டும்.

கோவை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தெருவிளக்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஒரு லட்சம் டன் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மாசுபட்டு உள்ளது. எனவே கோவை மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தூய்மை பணிகளை மேற்கொண்டு மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் மெட்டல்மணி, பி.நாச்சிமுத்து, நந்தகுமார், குப்புசாமி, குமரேசன், பகுதி செயலாளர்கள் எஸ்.எம்.சாமி, கோவை லோகு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story