சுரண்டை காமராஜர் அரசு கலை கல்லூரியில் ரூ.1¼ கோடியில் புதிய வகுப்பறைகள் அமைச்சர் ராஜலட்சுமி அடிக்கல் நாட்டினார்
சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் ரூ.1¼ கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட உள்ளது.
சுரண்டை,
சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் ரூ.1¼ கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழாவில் அமைச்சர் ராஜலட்சுமி கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டினார்.
புதிய வகுப்பறைகள்நெல்லை மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் 2 ஆயிரத்து 600 மாணவ– மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவ–மாணவிகள் தடையின்றி கல்வி பயில வகுப்பறை வசதிகள் வேண்டும் என கல்லூரி சார்பில், கோரிக்கை விடப்பட்டு இருந்தது. இதையடுத்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் அடிக்கல் நாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன், துணை தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் கிளாடிஸ் வரவேற்றார்.
அமைச்சர் அடிக்கல் நாட்டினார்அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நடந்த விழாவில், செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. வாழ்த்துரை வழங்கினார். பின்னர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர் குமாரசாமி, சதீஷ்குமார், ராம்குமார், சுரண்டை நகர அ.தி.மு.க. பொறுப்பாளர் சிவசங்கர், பாலையா பாண்டியன், வக்கீல் ராம்குமார், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கல்லூரி சார்பில், கூடுதல் பஸ் வசதி, கூடுதல் அலுவலக பணியாளர்கள் பேராசிரியர்கள், கல்லூரிக்கு தனி டிரான்ஸ்பார்மர், கூடுதலாக வகுப்பறை வசதிகள் வேண்டி அமைச்சர் ராஜலட்சுமி, செல்மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ., மற்றும் கலெக்டர் ஷில்பா ஆகியோரிடம் கல்லூரி நிர்வாகத்தினர் மனு கொடுத்தனர்.