கள்ள ரூபாய் நோட்டுகள் பிடிபட்ட விவகாரம்: சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது


கள்ள ரூபாய் நோட்டுகள் பிடிபட்ட விவகாரம்: சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jun 2018 2:00 AM IST (Updated: 25 Jun 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

கள்ள ரூபாய் நோட்டுகள் பிடிபட்ட சம்பவத்தில் தொடர்புடைய சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சங்கரன்கோவில், 

கள்ள ரூபாய் நோட்டுகள் பிடிபட்ட சம்பவத்தில் தொடர்புடைய சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட இருப்பதாக சங்கரன்கோவில் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் சேர்ந்தமரம் ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். சோதனையில், காரில் இருந்தவர்கள் வைத்திருந்த பையில் கத்தை கத்தையாக 2 ஆயிரம் மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் இருப்பதும், அவை அனைத்தும் கள்ள ரூபாய் நோட்டுகள் என்பதும் தெரியவந்தது. இந்த சோதனையின் போது கார் டிரைவர் தப்பிச் சென்றார்.

4 பேர் கைது

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஆம்பூரை சேர்ந்த சண்முகம் (வயது 51), சங்கரன்கோவில் அருகே உள்ள களப்பாகுளம் காலனி தெருவை சேர்ந்த மாடசாமி மகன் சங்கர் கணேஷ் (24), அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் (40) என்பதும், தப்பி ஓடிய கார் டிரைவர் சங்கரன்கோவில் இலவன்குளம் ரோட்டை சேர்ந்த அப்துல் கபூர் மகன் முகம்மது ஷெரிப் (35) என்பதும் தெரியவந்தது.

அவர்களிடம் மொத்தம் 2 லட்சத்து 73 ஆயிரம் கள்ளரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்து சங்கரன்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் சண்முகம் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். அவர், ஒரு கொலை வழக்கு தொடர்பாக தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story