மழை, வெயிலில் துரு பிடித்து காணப்படும் இரும்பு கம்பிகள் பசுமை வீடுகள் திட்ட பயனாளிகளுக்கானவை


மழை, வெயிலில் துரு பிடித்து காணப்படும் இரும்பு கம்பிகள் பசுமை வீடுகள் திட்ட பயனாளிகளுக்கானவை
x
தினத்தந்தி 25 Jun 2018 4:15 AM IST (Updated: 25 Jun 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பசுமை வீடுகள் திட்ட பயனாளிகளுக்காக வழங்கப்பட வேண்டிய கம்பிகள் மழை, வெயிலில் துரு பிடித்து காணப்படுகிறது.

பூந்தமல்லி,

பூந்தமல்லியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பூந்தமல்லி ஒன்றியத்தில் செயல்படும் காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை, பாரிவாக்கம், அகரமேல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 28 ஊராட்சிகளும் இதன் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இங்கு தினந்தோறும் திருமண உதவித்தொகை, தொகுப்பு மற்றும் பசுமை வீடுகள், அம்மா சிமெண்டு உள்ளிட்ட தேவைகளுக்காக இங்கு வந்து செல்கின்றனர்.

பெரும்பாலும் தொகுப்பு வீடுகள் கேட்டு அதிக அளவில் பொதுமக்கள் இங்கு வருகின்றனர்.

இந்த நிலையில் பசுமை வீடுகள் திட்ட பயனாளிகளுக்காக தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்படும் இரும்பு கம்பிகள் கடந்த பல ஆண்டுகளாக கொளுத்தும் வெயிலிலும், மழையிலும் இருப்பதால் இரும்பு கம்பிகள் துருப்பிடிக்கும் நிலையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதனால் இரும்பு கம்பிகளை வைக்க ஒரு குடோன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்.

தமிழக அரசின் சார்பில் பசுமை வீடுகள் கட்ட இரும்பு கம்பிகளும், சிமெண்டும் கொடுக்கின்றனர். ஆனால் சிமெண்டு பாதுகாப்பாக அறைகளில் வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் கம்பிகள் பல ஆண்டுகளாக வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தின் வெளியே திறந்த வெளியில் டன் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் துருப்பிடித்து காணப்படுகிறது.

இதனால் வீடுகள் கட்ட கம்பிகள் எடுத்து செல்லும்போது அதன் உறுதி தன்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் ஏராளமான கட்டிடங்கள் உள்ளது. அதில் இந்த கம்பிகளை எடுத்து வைக்க வேண்டும். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு பணியில் இருந்த ஊழியரே அதிகாரிகளுக்கு தெரியாமல் இங்கிருந்த இரும்பு கம்பிகளை எடுத்து கள்ளச்சந்தையில் விற்று விட்டார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மேலும் இதுவரையில் அந்த கம்பிகள் அங்கிருந்து மாற்றாமல் அப்படியே உள்ளது. அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் இரும்பு கம்பிகள் திருட்டு போகும் நிலையும் உள்ளது. எனவே இந்த கம்பிகளை பாதுகாப்பான அறைகளில் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டு அடித்த புயலின் போது வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மீது வைக்கப்பட்டிருந்த தமிழ்வாழ்க என்ற பெயர்பலகை விழுந்து இதுவரை அங்கு வைக்கப்படாமல் கீழே குப்பைகள் இருக்கும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதனையும் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story