வில்லியனூர் அருகே ஆற்று மணல் கடத்திச் சென்ற லாரி பறிமுதல்


வில்லியனூர் அருகே ஆற்று மணல் கடத்திச் சென்ற லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 25 Jun 2018 3:15 AM IST (Updated: 25 Jun 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

வில்லியனூர் அருகே செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்திய லாரியை துணை தாசில்தார் பறிமுதல் செய்தார்.

வில்லியனூர்,

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் இருந்து திருட்டுத்தனமாக ஆற்று மணல் அள்ளி கடத்திச் செல்லப்படுவதாக வில்லியனூர் துணை தாசில்தார் நித்யானந்தனுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து துணை தாசில்தார் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் செல்லிப்பட்டு பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் சென்றபோது எதிரில் ஒரு லாரி வருவதை கண்டு அதனை நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த லாரியின் டிரைவர் லாரியை நிறுத்தாமல் சென்றார்.

அதைத் தொடர்ந்து துணைத் தாசில்தார் நித்யானந்தன், அது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத் தார். தகவல் அறிந்ததும் பத்துக்கண்ணு சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அந்த லாரியை மடக்கினர். போலீசாரை பார்த்ததும் லாரியை நிறுத்திவிட்டு, அதன் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

அதைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த துணைதாசில்தார் மற்றும் வருவாய் துறையினர் அந்த லாரியை சோதனை செய்தனர்.

அப்போது அந்த லாரியில் சங்கராபரணி ஆற்றில் இருந்து திருட்டுத்தனமாக அள்ளப்பட்டு ஆற்று மணல் கடத்தி வந்ததும், அதில் ஆற்று மணல் இருப்பது தெரியாமல் இருப்பதற்காக அதன் மீது ஜல்லிக் கற்கள் பொடியை கொட்டி மறைத்து நூதன முறையில் ஆற்று மணலை கடத்தியதும் தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து அந்த லாரியை துணை தாசில்தார் பறிமுதல் செய்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும் மணல் கடத்தல் தொடர்பாக போலீசில் அவர் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story