மதசார்பற்ற கட்சிகளை இணைக்கும் மாநாடு; ராகுல்காந்தி பங்கேற்கிறார் தொல்.திருமாவளவன் பேட்டி
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மதசார்பற்ற கட்சிகளை இணைக்கும் மாநாட்டினை செப்டம்பர் முதல் வாரத்தில் நடத்த உள்ளோம். இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கும் உள்ளார் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான ‘அமைப்பாய் திரள்வோம்’ என்ற நூலின் திறனாய்வுக்கூட்டம் புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுவையில் விளம்பர பேனர்கள் வைக்க கவர்னர் தடை விதித்துள்ளனர். இது ஜனநாயக விரோத செயலாகும். பிற மாநிலங்களில் கட்டணம் வசூலித்துவிட்டு குறிப்பிட்ட இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்க அனுமதிக்கப்படும் முறையை புதுவையிலும் கடைபிடிக்க வேண்டும்.
தமிழகம் மற்றும் புதுவையில் பழங்குடியின மக்களுக்கு ஜாதி சான்றிதழ்கள் 15 நாட்களுக்குள் கிடைக்க இரு அரசுகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கவர்னருக்கு எதிராக நாமக்கல்லில் அறவழியில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்திய தி.மு.க.வினரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம், சென்னை–சேலம் இடையே பசுமை சாலை எதிர்ப்பு போராட்டம், கவர்னர் எதிர்ப்பு போராட்டம் ஆகியவற்றில் கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும் கைதானவர்கள் மீது உள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மட்டுமின்றி நச்சு தன்மை கொண்ட தொழிற்சாலைகளை மூடுவதற்கு அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
சென்னை–சேலம் பசுமை வழிச் சாலை திட்டத்தில் விவசாயிகள், பொதுமக்களிடம் கருத்தை கேட்டு அறிந்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதற்கு பதிலாக இப்போது உள்ள 4 வழிச்சாலையை மேம்படுத்த வேண்டும். பொதுமக்கள் மீது அடக்குமுறையை அரசு மேற்கொள்ள கூடாது. பசுமை வழிச் சாலை திட்டத்தை நடைமுறைப்படுவதற்கு மிக வேகமாக ஆர்வம் காட்டுவதற்கான காரணம் என்ன?
வருகிற செப்டம்பர் முதல் வாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் மாநாடு நடத்த முடிவுவெடுத்துள்ளோம். இதில் ராகுல் காந்தி தலைமையேற்க உள்ளார். மாநாட்டில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும்.
கோவை மாநகராட்சியில் குடிநீர் வினியோகத்தை ஒரு தனியார் நிறுவனத்துக்கு தாரை வார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனை அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.