பத்மநாபபுரம் நகராட்சியில் சாலையோரங்களில் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு


பத்மநாபபுரம் நகராட்சியில் சாலையோரங்களில் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
x
தினத்தந்தி 25 Jun 2018 4:00 AM IST (Updated: 25 Jun 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

பத்மநாபபுரம் நகராட்சியில் சாலையோரங்களில் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, குப்பைகளை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பத்மநாபபுரம்,

பத்மநாபபுரம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான பத்மநாபபுரம் அரண்மனை, கோவில்கள், மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி, கோர்ட்டு, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் உள்ளன.

இங்கு குப்பைகளை சேகரிப்பதற்காக தக்கலை பஸ் நிலையம் மற்றும் சாலையோரங்களில் ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அதில் தேங்கும் குப்பைகளை தினந்தோறும் சரியான முறையில் அகற்றப்படுவதில்லை. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

பத்மநாபபுரம் அரண்மனைக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளை பார்த்து முகம் சுழிக்கிறார்கள்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, குடியிருப்பு மற்றும் வணிகவளாகம் பகுதிகள் சுத்தமாக இல்லையெனில் அபராதம் விதிக்கும் நகராட்சி நிர்வாகம், சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை ஏன் அகற்றாமல் உள்ளது?. இந்த குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அவற்றை தினமும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

பத்மநாபபுரம் நகராட்சி பகுதிகளில் தினமும் அதிகப்படியான குப்பைகள் சேருகிறது. நகராட்சியில் உள்ள துப்புரவு பணியாளர்கள் மாற்று பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதனால், குப்பைகளை அகற்றும் பணி பாதிக்கப்படுகிறது.

துப்புரவு பணிக்கான பணியாளர்கள் இன்னும் சில தினங்களில் முழுமையாக துப்புரவு பணி மேற்கொள்வர். அப்போது நகராட்சி பகுதிகளில் தேங்கும் குப்பைகளை தினமும் முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Next Story