காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நாங்களும் சில நிபந்தனைகளுடன் 2 பெயர்களை அனுப்புவோம் தேவேகவுடா அறிவிப்பு
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நாங்களும் சில நிபந்தனைகளுடன் 2 பெயர்களை அனுப்புவோம் என்று தேவேகவுடா அறிவித்தார்.
பெங்களூரு,
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நாங்களும் சில நிபந்தனைகளுடன் 2 பெயர்களை அனுப்புவோம் என்று தேவேகவுடா அறிவித்தார்.
குமாரசாமி ஆலோசனை பெற்றார்காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு 2 உறுப்பினர்களின் பெயர்களை அனுப்பும்படி கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகம் இதுவரை பெயர்களை வழங்கவில்லை. சில நிபந்தனைகளுடன் பெயர்களை அனுப்புவோம் என்று குமாரசாமி கூறி இருந்தார். இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைத்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டது.
இதற்கு கர்நாடக முதல்–மந்திரி குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்துவதாக அவர் அறிவித்தார். மேலும் இதுகுறித்து முன்னாள் பிரதமரும், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடாவை அவருடைய மகன் குமாரசாமி நேற்று முன்தினம் இரவு நேரில் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த விஷயத்தில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றி தேவேகவுடாவிடம் குமாரசாமி ஆலோசனை பெற்றார். இந்த நிலையில் இதுபற்றி தேவேகவுடா ஹாசனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது கூறியதாவது:–
நான் பார்த்தது இல்லைகாவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் 10 நாட்களுக்கு ஒரு முறை அணைகளில் நீரை அளவீடு செய்யும். என்ன பயிர் பயிரிட வேண்டும், எவ்வளவு நீரை பயன்படுத்த வேண்டும் என்பதையும் அந்த ஆணையமே முடிவு செய்யும். இத்தகைய நிபந்தனைகளை நான் பார்த்தது இல்லை.
அதனால் தான் நான் இந்த காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளேன். இந்த விஷயத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மாநில அரசுக்கு ஆலோசனை கூறி இருக்கிறேன். நாங்களும் சில நிபந்தனைகளுடன் 2 பெயர்களை மத்திய அரசுக்கு அனுப்புவோம்.
அடுத்தகட்ட போராட்டம்இது தொடர்பாக விரைவாக கடிதம் தயார் செய்து பிரதிநிதிகளின் பெயரை அனுப்பி வைப்போம். நிபந்தனைகளின்படி அணைகளில் கூடுதலாக உள்ள நீரை இருப்பு வைத்துக்கொள்ள முடியாது. இந்த எல்லா பிரச்சினைகளும் மத்திய அரசிடம் முதல்–மந்திரி குமாரசாமி விவரமாக எடுத்துக் கூறி இருக்கிறார். இந்த விஷயத்தில் அடுத்தகட்ட போராட்டம் கண்டிப்பாக இருக்கும்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.