சென்னையில் பா.ம.க.–பா.ஜ.க. தொண்டர்கள் இடையே மோதல்


சென்னையில் பா.ம.க.–பா.ஜ.க. தொண்டர்கள் இடையே மோதல்
x
தினத்தந்தி 26 Jun 2018 4:15 AM IST (Updated: 26 Jun 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பா.ம.க.– பா.ஜ.க. தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்றுமுன்தினம் பங்கேற்ற டி.வி. விவாதத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை விமர்சித்து பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க. நிர்வாகிகள் சிலர் தெரிவித்திருந்தனர்.

அதன்படி தியாகராயநகர் பர்கிட் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து பா.ம.க.வினர் கட்சி கொடிகளுடன் வைத்தியநாதன் சாலையில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக நேற்று பேரணியாக வந்தனர். இந்த பேரணிக்கு பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமை தாங்கினார். சுமார் 100–க்கும் மேற்பட்டவர்கள் கண்டன கோ‌ஷம் எழுப்பியவாறு வந்தனர்.

இதனை அறிந்த போலீசார் பா.ஜ.க. அலுவலகம் அமைந்துள்ள சாலைக்கு செல்லும் வழிகளை சுற்றிலும் இரும்பு தடுப்புகள் அமைத்திருந்தனர். இந்தி பிரசார சபா அருகே பா.ம.க.வினர் வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்டு பஸ்சில் ஏற்றப்பட்டபோது, பா.ம.க. வினர் சிலர் ‘பா.ஜ.க. ஒழிக’ என்று கோ‌ஷம் எழுப்பினர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பா.ஜ.க.வினரும் பதிலுக்கு ‘பா.ம.க. ஒழிக’ என்று கோ‌ஷம் எழுப்பினர். இதனால் 2 தரப்பினருக்கு இடையேயும் வாய்த் தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் வாய்த்தகராறு முற்றிய நிலையில் கை கலப்பு ஏற்பட்டது. 2 தரப்பினரும் ஒருவருக்கொருவர் கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து எதிர் தரப்பினரை தாக்கினர்.

பா.ம.க. மற்றும் பா.ஜ.க. வினரின் மோதலால் தியாகராயநகர் பகுதி போர்க்களம் போல காட்சி அளித்தது. இதற் கிடையே முற்றுகையிட வந்தவர்களை கைது செய்து அழைத்துச் செல்ல போலீசார் தரப்பில் கொண்டு வரப்பட்டிருந்த மாநகர பஸ்சின் கண்ணாடியும் உடைத்து நொறுக் கப்பட்டது. மேலும் ஜன்னல் கம்பிகளும் நொறுக்கப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பா.ம.க.வை சேர்ந்த 115 பேரும், பா.ஜ.க.வை சேர்ந்த 15 பேரும் என மொத்தம் 130 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அதே பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

Next Story