புதிய எம்.எல்.ஏ.க்கள் உரிமை மீறல் பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்பு - குமாரசாமி பேச்சு


புதிய எம்.எல்.ஏ.க்கள் உரிமை மீறல் பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்பு - குமாரசாமி பேச்சு
x
தினத்தந்தி 26 Jun 2018 4:45 AM IST (Updated: 26 Jun 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

கடந்த பட்ஜெட்டை அங்கீகரித்து அமல்படுத்தினால் புதிய எம்.எல்.ஏ.க்கள் உரிமை மீறல் பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக குமாரசாமி கூறினார்.

பெங்களூரு,

விவசாய கடன் தள்ளுபடி குறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள், மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர்களுடன் குமாரசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் விவசாயத்துறை மந்திரி சிவசங்கரரெட்டி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி சிவானந்தபட்டீல், கூட்டுறவுத்துறை மந்திரி பண்டப்பா காசம்பூர் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் குமாரசாமி பேசியதாவது:-

விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை அமல்படுத்துவது குறித்து விவரங்களை சேகரித்து வருகிறேன். கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்ற செய்தியை பத்திரிகைகளில் படித்தேன். கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி வேண்டும் என்று சொல்கிறீர்கள், வருகிற மார்ச் மாதத்திற்கு பிறகு ரூ.10 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யுங்கள் என்று சொல்கிறீர்கள். கடன் தள்ளுபடி விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு அல்ல, இந்த கடன் தள்ளுபடிக்கு நிதி எங்கு இருந்து திரட்டுவீர்கள் என்றெல்லாம் விவாதம் நடத்துகிறார்கள்.

கடன் தள்ளுபடியால் மாநில அரசுக்கு ரூ.17 ஆயிரம் கோடி நிதிச்சுமை ஏற்படும் என்றும், அதிகாரிகள் தேவையற்ற கருத்துகளை தெரிவிக்கிறார்கள். இந்த தகவல் எனக்கு கிடைத்துள்ளது. இந்த அரசு இன்னும் எத்தனை நாட்கள் இருக்குமோ என்றெல்லாம் அதிகாரிகள் பேசுகிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் வரை மட்டுமே இந்த அரசு நீடிக்கும் என்று அதிகாரிகள் பேசிக்கொள்கிறார்கள்.

கடன் தள்ளுபடியால் விவசாயிகள் பயன் பெற வேண்டும் என்பதே எனது நோக்கம். அந்த நோக்கம் நிறைவேற வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நான் மற்றவர்களை போல் அதிகாரிகளை மிரட்டி வேலை வாங்க மாட்டேன். மென்மையான அணுகுமுறை மூலம் வேலை வாங்குவேன். ஆனால் அதிகாரிகள் அரசின் திட்டத்திற்கு எதிராக பேசுவது, இடைத்தரகர்கள் பயன் அடையும் வகையில் பேசுவது நல்லதல்ல.

விதான சவுதாவில் ‘கமிஷன்‘ விவகாரம் நடப்பது எனக்கு தெரியும். நான் பட்ஜெட் தாக்கல் செய்வேனோ இல்லையோ எனக்கு தெரியாது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் பட்ஜெட்டை தாக்கல் செய்யுங்கள் என்று சிலர் கூறுகிறார்கள். கடந்த முறை எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்களில் 100 பேர் தோல்வி அடைந்தனர்.

கடந்த பட்ஜெட்டை அங்கீகரித்து அமல்படுத்தினால், புதிதாக வந்துள்ள 100 எம்.எல்.ஏ.க்களுக்கு தொந்தரவு ஏற்படும். அவர்கள் உரிமை மீறல் பிரச்சினையை கொண்டு வந்தால் என்ன செய்வது?. அதற்காக தான் புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு குமாரசாமி பேசினார்.

Next Story