திருப்பூர், பல்லடத்தில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு, கலெக்டரிடம் மனு
திருப்பூர், பல்லடத்தில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர். கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த அனைத்து கட்சி நிர்வாகிகள், சமூக நல அமைப்புகள், பொதுமக்கள் திரளாக வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
சாமுண்டிபுரம் லட்சுமி தியேட்டர் சாலையில் டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடை அமைக்க உள்ள இந்த சாலையின் வழியாக பள்ளி மாணவ–மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் அதிக அளவில் செல்வது வழக்கம். இந்த சாலையில் மாலை நேரங்களில் காய்கறி கடைகள் சாலையோர வியாபாரிகளால் நடத்தப்பட்டு வருகிறது. காய்கறிகளை வாங்க பெண்கள் அதிக அளவில் மாலை நேரத்தில் வருவது உண்டு. டாஸ்மாக் கடை இங்கு திறக்கப்பட்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சட்டம், ஒழுங்கு பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க வேண்டாம்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி 32–வது வார்டு பகுதியை சேர்ந்த அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–
32–வது வார்டுக்கு உட்பட்ட ஊத்துக்குளி பிரதான சாலையில் ஏற்கனவே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் பல மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டு, மண்ணரை சுடுகாட்டுப்பகுதியில் ஒதுக்குப்புறமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திடீரென்று பிரதான சாலையில் 2 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் டாஸ்மாக் பார்களும் திறக்கப்பட்டு இருக்கிறது. இது அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் பிரதான சாலையில் கருமாரம்பாளையத்திலும், மண்ணரையிலும் 2 அரசு பள்ளிகள் உள்ளன. அதுபோல் பாளையக்காட்டில் சிக்கண்ண செட்டியார் அரசு பள்ளியும், முருகப்பசெட்டியார் பெண்கள் அரசு பள்ளியும் உள்ளன. பின்னலாடை நிறுவனங்களும் அங்கு அதிக அளவில் உள்ளன. இந்த டாஸ்மாக் கடைகளால் மாணவ–மாணவிகள், பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி இந்த 2 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அறவழி போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
பல்லடத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அண்ணாத்துரை மற்றும் சிலர் அளித்த மனுவில், பல்லடம் பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். பஸ் நிலையத்துக்கு எதிர்புறம் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த கடையின் அருகிலேயே மேலும் ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது அப்பகுதி மக்களை அதிருப்தியடைய செய்துள்ளது. திருச்சி–கோவை தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் அதிகம் உள்ளது. அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த சாலையின் கரையோரம் மேலும் ஒரு டாஸ்மாக் கடை திறந்தால் விபத்துகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று கூறியுள்ளனர்.
பல்லடம் கோடங்கிப்பாளையம், எம்.ஜி.ஆர். நகர், காரணம்பேட்டை, சின்னக்கோடங்கிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், கோடங்கிப்பாளையத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அந்த இடத்தை சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளன. எனவே டாஸ்மாக் கடையை அங்கு அமைக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர்.