கணவரின் கையில் இருந்து குழந்தை தவறி விழுந்ததால் ஆத்திரம்: இளம்பெண் தற்கொலை
கணவரின் கையில் இருந்து குழந்தை தவறி கீழே விழுந்ததால் ஆத்திரம் அடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காங்கேயம்,
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கரங்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 25). இவருடைய மனைவி மீனாட்சி (20). இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. சுப்பிரமணி தனது குடும்பத்துடன் கடந்த சில மாதங்களாக திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே காடையூரில் உள்ள தேங்காய் களத்தில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சுப்பிரமணி, தனது குழந்தையை கையில் வைத்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சுப்பிரமணியின் கையில் இருந்த குழந்தை தவறி கீழே விழுந்தது. இதனால் குழந்தை வலி தாங்க முடியாமல் அலறியது. குழந்தை விழுந்து விட்டதால் கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் மனம் உடைந்த மீனாட்சி, திடீரென்று வீட்டிற்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். இதையடுத்து கதவை நீண்ட நேரமாக தட்டியும் கதவை மீனாட்சி திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.
அப்போது வீட்டிற்குள் மீனாட்சி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காங்கேயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து மீனாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மீனாட்சிக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆவதால், தாராபுரம் சப்–கலெக்டர் கிரேஸ் பச்சாவு விசாரணை நடத்தி வருகிறார்.
கணவரின் கையில் இருந்த ஒரு வயது குழந்தை தவறி கீழே விழுந்ததால் மனம் உடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தபகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.