விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கோவை- கரூர் புறவழிச்சாலை பணியை கைவிட வேண்டும், கலெக்டரிடம் மனு


விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கோவை- கரூர் புறவழிச்சாலை பணியை கைவிட வேண்டும், கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 26 Jun 2018 4:30 AM IST (Updated: 26 Jun 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கோவை- கரூர் புறவழிச்சாலை பணியை கைவிட வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்டக்குழு தலைவர் பழனிசாமி தலைமையில் விவசாயிகள் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கரூர் முதல் கோவை வரை புறவழிச்சாலை அமைக்கப்போவதாக நெடுஞ்சாலை துறை அறிவித்து உள்ளது. இதற்காக ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. இது சம்பந்தமாக விவசாயிகளிடம் எவ்வித கருத்து கேட்பு கூட்டங்களும் நடத்தப்படவில்லை. இதனால் கிராமப்புற விவசாயிகள் அகதிகளாக வாழ்நிலை தேடி நகர்ப்புறங்களில் குவிய நேரிடும்.

மேலும் இதுநாள் வரை மத்திய அரசோ, மாநில அரசோ பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வுத்திட்டம் குறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கரூர்- கோவை புறவழிச்சாலை பணியை கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், குறிச்சி குளத்துக்கு தண்ணீர் வரும் பாதையில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. மேலும் புதர்செடிகள் வளர்ந்து உள்ளதாலும் மழைநீர் வருவதில் சிரமம் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு மதுக்கரை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளது.

வீரகேரளம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் அளித்த மனுவில், வீரகேரளம் பஸ் நிறுத்தத்தில் பயணிகளின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. தற்போது இந்த கேமராவை காணவில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே பெண்கள், மாணவ- மாணவிகள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு கருதி இந்த பஸ் நிறுத்தத்தில் மீண்டும் ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. 

Next Story