கலெக்டர் அலுவலகத்தில் தொட்டிலில் போடப்பட்ட ஆண் குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு


கலெக்டர் அலுவலகத்தில் தொட்டிலில் போடப்பட்ட ஆண் குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 26 Jun 2018 3:30 AM IST (Updated: 26 Jun 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தொட்டிலில் போடப்பட்ட ஆண் குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் 2–வது மாடியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பு தொட்டில் வைக்கப்பட்டு உள்ளது. அந்த தொட்டிலில் கடந்த மே மாதம் 14–ந் தேதி பிறந்து 20 நாட்களே ஆன ஒரு ஆண் குழந்தை கிடந்தது. அந்த குழந்தை 1 கிலோ 400 கிராம் எடை இருந்தது. அந்த குழந்தையை, குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

வழக்கமாக இருக்கும் எடையை விட அந்த குழந்தை எடை குறைவாக இருந்ததால் அதை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளம் குழந்தைகள் வார்டில் அனுமதித்து அங்கு இருக்கும் இன்குபேட்டரில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் அந்த குழந்தையின் உடல் நன்கு தேறியது. தற்போது அந்த குழந்தை 2 கிலோ எடை உள்ளது. மேலும் அந்த குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது. எனவே அதை கோவை கிணத்துக்கடவில் உள்ள குழந்தைகளை பராமரிக்கும் காப்பகத்தில் ஒப்படைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி நேற்று அந்த குழந்தைக்கு வெங்கடேஷ் என்று பெயர் சூட்டப்பட்டு, காப்பக நிர்வாகிகளிடம் கோவை அரசு ஆஸ்பத்திரி இருப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர் சவுந்திரவேல் ஒப்படைத்தார்.

இது குறித்து இருப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர் சவுந்திரவேல் கூறும்போது, ‘இந்த குழந்தையை தொட்டிலில் போட்டவர்கள் அது தங்களின் குழந்தைதான் என்று கேட்க வந்தால், அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கோ அல்லது குழந்தை ஒப்படைக்கப்பட்ட காப்பகத்திற்கோ நேரில் சென்று தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து குழந்தையை பெற்றுச்செல்லலாம். இல்லையென்றால் அந்த குழந்தை காப்பகத்தில் பராமரிக்கப்படும்’ என்றார்.


Next Story