வீராம்பூரில் மேம்பாலம் கட்டக்கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மனு


வீராம்பூரில் மேம்பாலம் கட்டக்கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மனு
x
தினத்தந்தி 26 Jun 2018 4:15 AM IST (Updated: 26 Jun 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை அருகே வீராம்பூரில் அடிக்கடி பழுதாகும் ரெயில்வே கேட்டினால் மக்கள் அவதி அடைகின்றனர். எனவே அங்கு மேம்பாலம் கட்டக்கோரி, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 267 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதற்கிடையே கூட்டத்தில், கரூர் மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் குளித்தலை ஒன்றிய செயலாளர் சங்கமடை அசோக் தலைமையில் மாவட்ட செயலாளர் மூர்த்தி, தாந்தோன்றிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர், வழக்கறிஞர் கொங்கு கோபி உள்ளிட்ட நிர்வாகிகள் கலெக்டரிம் ஒரு மனு கொடுத்தனர். அதில், கடந்த 18-ந் தேதி கிருஷ்ணராயபுரம் தாலுகா சிந்தலவாடியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் பிரபு, அய்யர்மலை-தாளியம்பட்டி சாலையில் வேன் மோதிய விபத்தில் படுகாயமடைந்தார். அவரை 108 ஆம்புலன்சு மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது வீராம்பூரில் உள்ள ரெயில்வேகேட் பழுதடைந்தது. இதனால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் போனதால் பிரபு பரிதாபமாக இறந்தார். இந்த ரெயில்வேகேட் அடிக்கடி பழுதாவதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனால் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் பள்ளி, கல்லூரி மாணவர்களும், வேலைக்கு செல்வோரும் சிரமப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அங்கு மேம்பாலம் கட்டித்தர ஏற்பாடு செய்ய வேண்டும், என்று கூறியிருந்தனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மணவாசி கிராமத்தை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் நல சங்கத்தினர் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், மாட்டு வண்டியின் மூலம் ஆற்றில் மணல் எடுத்து வந்து கட்டிட பணிகளுக்கு கொடுத்து நாங்கள் பிழைப்பு நடத்தி வருகிறோம். எனவே மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும். நாங்கள் லாரிகளுக்கு மணல் எடுத்து கொடுக்கவில்லை. ஆனாலும் எங்கள் மீது சிலர் அவதூறு பரப்பி வருகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் வேலாம்பூண்டியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. இவருடைய மனைவி வளர்மதி, கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், எனது இளைய மகள் கீர்த்தனாவை, எனது தந்தையின் 2-வது மனைவியின் மகனுக்கு திருமணம் செய்து வைத்தோம். கீர்த்தனாவின் கணவர் கரூரில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்தார். இந்த நிலையில் வரதட்சணை கேட்டு எனது மகளை கொடுமைப்படுத்தினர். திடீரென ஒருநாள் கீர்த்தனா மன உளைச்சலில் இறந்து விட்டதாக தகவல் கிடைத்தது. இதனால் நாங்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டோம். எனவே எனது மகளின் சாவில் உள்ள மர்மத்தை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, மனு அளித்த 2 மாற்றுத்திறனாளி மாணவர் களுக்கு எழுத்துகளை பெரிதாக காட்டும் கருவியையும், ஒரு பயனாளிக்கு மடக்கு சக்கர நாற்காலியும், 2 பயனாளிகளுக்கு உதவி உபகரணங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை என மொத்தம் 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பாலசுப்பிரமணியன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி காமாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story