கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளி படுகொலை மனைவி-தம்பி கைது


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளி படுகொலை மனைவி-தம்பி கைது
x
தினத்தந்தி 26 Jun 2018 4:30 AM IST (Updated: 26 Jun 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

காரையூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை அடித்து கொலை செய்த மனைவி மற்றும் தொழிலாளியின் தம்பியை போலீசார் கைது செய்தனர்.

காரையூர்,

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சன்னாசி (வயது 45). இவர் மரம் வெட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி விஜயா(31) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சன்னாசி மனைவி விஜயாவுக்கும், சன்னாசி தம்பி கருப்பையாவிற்கும் (40) கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்தநிலையில் சன்னாசிக்கும், அவரது மனைவி விஜயாவுக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதனால் கருப்பையா தனது குடும்பத்தினருடன் தாலம்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 23-ந்தேதி விஜயா தனது கொழுந்தன் கருப்பையாவிடம், எனக்கு நிம்மதியில்லாமல் போய்விட்டது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என கூறியதாக தெரிகிறது. இதையடுத்து சன்னாசியை கொலை செய்வதற்கு கருப்பையா மற்றும் விஜயா திட்டம் தீட்டினர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சன்னாசி தனது மோட்டார் சைக்கிளில் சித்தூரில் உள்ள ஒரு பகுதியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனை அறிந்த கருப்பையா அரிவாளுடன் சென்று அந்த வழியாக வந்த சன்னாசியை, தனக்கு இடையூறாக இருந்ததாக கூறி அண்ணன் என்றும் பாராமல் அரிவாளால் வெட்டி னார். இதில் நிலை குலைந்துபோன சன்னாசி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் காரையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலச்சந்திரன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சன்னாசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயா மற்றும் கருப்பையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story