சிங்கபெருமாள்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜனை தாக்க முயன்ற வாலிபர் கைது


சிங்கபெருமாள்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜனை தாக்க முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 Jun 2018 2:29 AM IST (Updated: 26 Jun 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

சிங்கபெருமாள்கோவில் கூட்ரோடு அருகே தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

வண்டலூர்,

சிங்கபெருமாள்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜனை தாக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் சிங்கபெருமாள்கோவில் கூட்ரோடு அருகே நேற்றுமுன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மேடையில் ஏறிய வாலிபர் ஒருவர் தமிழிசை சவுந்தரராஜனை தாக்க முயன்றார். இதனை பார்த்ததும் மேடையில் இருந்த பா.ஜனதா தொண்டர்கள் அந்த வாலிபரை பிடித்து மறைமலைநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் அந்த வாலிபரிடம் மறைமலைநகர் போலீசார் தொடர்ந்து விசாரித்தபோது அவர் சென்னை பெருங்குடி திருக்குமரன் தெருவை சேர்ந்த ரமேஷ்(வயது35) என்பது தெரியவந்தது. இதனையடுத்து ரமேஷ் மீது மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

விசாரணையில் ரமேஷ் போலீசாரிடம் கூறியதாவது:-

நேற்றுமுன்தினம் சிங்கபெருமாள்கோவிலில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு என்னுடைய மனைவியுடன் சென்றேன்., பின்னர் என்னுடைய மனைவியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு நான் மது அருந்தினேன். இதனையடுத்து சிங்கபெருமாள்கோவில் கூட்ரோட்டில் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் தமிழிசை பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தேன்.

அப்போது தமிழிசை சிறப்பாக பேசியதை பாராட்டி கை கொடுப்பதற்காக குடி போதையில் மேடையில் ஏறினேன் ஆனால் என்னை தவறாக புரிந்து கொண்டு பா.ஜனதா தொண்டர்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்துவிட்டனர்.

இவ்வாறு ரமேஷ் கூறியதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story