ஆலய இடத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் மனு


ஆலய இடத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 26 Jun 2018 4:15 AM IST (Updated: 26 Jun 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

ஆலய இடத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.

அப்போது சமூக நீதி பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் ரவிகுமார் தலைமையில் வந்த நிர்வாகிகள் கொடுத்த மனுவில், ராஜ ராஜசோழனால் உருவாக்கப்பட்ட உய்ய கொண்டான் வாய்க்கால் காவிரியில் பெட்டவாத்தலையில் இருந்து பிரிந்து சோமரசம்பேட்டை, திருச்சி நகரம், அரியமங்கலம் வழியாக திருவெறும்பூர் கடைமடை பகுதி வரை செல்கிறது. இந்த வாய்க்கால் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. மேலும், கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது.எனவே, இந்த வாய்க்காலில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இதேபோல் உய்யகொண்டான் வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் வீரங்கிநல்லூர் வாய்க்கால் உள்ளிட்ட கிளை வாய்க்கால்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் இன்னொரு கோரிக்கை மனுவையும் கொடுத்தனர்.

திருவெறும்பூர் தாலுகா பனையகுறிச்சி ஊராட்சி சர்க்கார் பாளையம் கிராமத்தில் பழமையான புனித மடியப்பர் கல்லறை ஆலயம் உள்ளது. விவசாய நிலங்களுக்கு இடையே அமைந்துள்ள இந்த ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜெப வழிபாடு நடைபெறும். வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் திருவிழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஆலயம் அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளர்கள் ஆலய இடத்தை ஆக்கிரமித்து வருகிறார்கள். ஆலயத்திற்கு செல்லும் பாதையை மறைத்து மதில்சுவர் எழுப்ப முயன்றபோது கிராமமக்கள் தடுத்து நிறுத்தினோம். அப்போது அங்கு வந்தவர்கள் எங்களை விரட்டி அடித்து விட்டார்கள். இதுபற்றி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். போலீசார் நியாயமான நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆலய நிலத்தை ஆக்கிரமித்து இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என கோரி சர்க்கார் பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

அரியமங்கலம் கிராமம் அற்புதசாமி புரத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் இன மக்கள் பாஸ்டின் கென்னடி என்பவரது தலைமையில் வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், ஆதிதிராவிடர்களுக்காக மாவட்ட நல அதிகாரி மற்றும் தனி தாசில்தாரால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், மாநகராட்சி ஆவணங்களில் பட்டாதாரர்களான எங்களது பெயர் இல்லாததால் வீடு கட்டி குடியிருக்க முடியவில்லை. எனவே, எங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட இடத்தை சர்வேயர் மூலம் அளந்து மாநகராட்சி ஆவணங்களில் எங்களுடைய பெயரை சேர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டு இருந்தது.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரின் பினாமி ஆக உள்ள மணப்பாறை அ.தி.மு.க. பிரமுகர் மணல் மற்றும் கல்குவாரி மூலம் பல ஆயிரம் கோடி சம்பாதித்து உள்ளார். அவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கருப்பையா என்ற வக்கீல் புகார் மனு கொடுத்தார்.

தண்ணீர் அமைப்பின் செயலாளர் நீலமேகம் கொடுத்த ஒரு மனுவில், நமக்கு போதுமான மழை கிடைத்தும் அதனை முறையாக சேமித்து வைக்காமல் கடலில் வீணாக கலக்க விட்டு விட்டு அண்டை மாநிலங்களில் தண்ணீருக்காக கையேந்தும் நிலை உள்ளது. எனவே மழை நீரை சேமிக்கும் விதமாக நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி மற்றும் குளங்களை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், தமிழக அரசு முன்பு செயல்படுத்திய மழைநீர் சேகரிப்பு அமைப்பினை வீடுகள்தோறும் மீண்டும் அமைக்கவும் வலியுறுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. 

Next Story