இலவச வீடுகள் ஒதுக்கீடு செய்ததில் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை கலெக்டரிடம் வலியுறுத்தல்


இலவச வீடுகள் ஒதுக்கீடு செய்ததில் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை கலெக்டரிடம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 Jun 2018 4:30 AM IST (Updated: 26 Jun 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

இலவச வீடுகள் ஒதுக்கீடு செய்ததில் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பூதலூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அண்ணாதுரையிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

பூதலூர் ஒன்றியம் வெண்டையம்பட்டி ஊராட்சியில் மத்திய அரசின் பிரதமரின் ஆவாஸ் யோஜனா கிராமின் மற்றும் மாநிலஅரசின் பசுமை வீடு ஆகிய இலவச வீடு கட்டும் திட்டம், கழிப்பறை கட்டும் திட்டம், தெருவிளக்கு பராமரிப்பு போன்றவற்றிலும், பொதுநிதியை பயன்படுத்துவதிலும் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த ஊழல் சம்பந்தமாக ஏற்கனவே மனு அளித்து முறையிட்டோம். தாங்கள்(கலெக்டர்) நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு ஊழலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறியிருந்தது.

பின்னர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கூறும்போது, ஊழலை அம்பலப்படுத்தியவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது. இலவச வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் உண்மையான பயனாளிகள் அல்ல. 37 வீடுகள் ஒதுக்கியதில் ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழலில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அரசு நலத்திட்டங்கள் தடையின்றி மக்களுக்கு சென்று சேர நடவடிக்கை எடுக்க கோரியும் வருகிற 28-ந் தேதி சானூரப்பட்டி கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.

தஞ்சை மாவட்ட தெரு வியாபார தொழிலாளர்கள் சங்க(ஏ.ஐ.டி.யூ.சி.) நிர்வாகிகள் சிலர், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், பூதலூர் ஒன்றியம் சானூரப்பட்டி ஊராட்சி பஸ் நிலையம் எதிரில் தெருவோரத்தில் 20 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளை தமிழ்நாடு தெரு வியாபாரிகள்(வாழ்வாதார பாதுகாப்பு, தெரு வணிகமுறைப்படுத்துதல்) திட்டம் மற்றும் விதிகளின் படி தற்போது வியாபாரம் செய்யும் இடத்தில் இருந்து வெளியேற்றுவதோ, வேறு இடத்திற்கு மாற்றுவதோ சட்ட விதிகளுக்கு புறம்பானதாகும்.

ஆனால் இந்த இடத்தை ஏலம் விடுவதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது சட்டவிதிகளுக்கு விரோதமானது. எனவே இந்த ஏலத்தை உடனடியாக கைவிட வேண்டும். சட்டவிதிகளின்படி தெருவோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். வணிகக்குழு அமைக்க வேண்டும். தற்போது வியாபாரம் செய்யும் தரைப்பகுதிக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தொடர்ந்து அதே இடத்தில் வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் நடன நையாண்டி மேள சங்க செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கிராமிய கலைஞர்கள் 10-க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் ரெட்டிப்பாளையம், மானோஜிப்பட்டி, அம்மாப்பேட்டை, திருவையாறு, பிள்ளையார்பட்டி ஆகிய இடங்களில் நாங்கள் வசித்து வந்தாலும் அனைவரும் ஒன்று கூடும் இடமாக தஞ்சை கீழஅலங்கம் வெள்ளைப்பிள்ளையார் கோவில் தெருவில் அலுவலக சங்க கட்டிடம் இருந்தது. 40 ஆண்டு காலமாக இருந்த சங்க கட்டிடத்தில் தான் கலைநிகழ்ச்சிகளுக்கான பயிற்சி வழங்கப்பட்டு எங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி வந்தோம்.

தற்போது அந்த கட்டிடம் இடித்து தள்ளப்பட்டுள்ளது. இதனால் வெளியூரில் இருந்து கலைநிகழ்ச்சிகளுக்காக ஒப்பந்தம் செய்ய வருபவர்கள் முகவரி தெரியாமல் திரும்பி செல்கின்றனர். நாங்கள் திசை மாறிய பறவைகளை போல இருக்கிறோம். எனவே கிராமிய கலைகளையும், கலைஞர்களையும் பாதுகாக்கும் வகையில் 500 கலைஞர்கள் அமரக்கூடிய வகையில் சங்க கட்டிடம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. 

Next Story