கடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க அதிநவீன விசைப்படகு வேண்டும் கலெக்டரிடம் மனு


கடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க அதிநவீன விசைப்படகு வேண்டும் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 26 Jun 2018 4:15 AM IST (Updated: 26 Jun 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

கடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க அதிநவீன விசைப்படகு வேண்டும் என்று கோரி கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம், மீனவர் ஒருங்கிணைப்பு சங்கத்தினர் மனு அளித்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் தங்களது கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர். அந்த மனுக்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அப்போது மீனவர் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் வின்சென்ட் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அதிநவீன விசைப்படகு

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் நலன் கருதி வானிலை மாற்றம் ஏற்பட்டால் அதை தெரிந்து கொள்ளும் விதமாகவும், தகவல் பரிமாற்றம் செய்ய வசதியாகவும் நவீன உபகரணம் வழங்க வேண்டும். மேலும் கடலில் மாயமாகும் மீனவர்களை தேடி கண்டுபிடிக்க அதிநவீன விசைப்படகு வேண்டும். மீனவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அழகியபாண்டியபுரம் பெருந்தலைக்காட்டை சேர்ந்த பொதுமக்கள் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அளித்த மனுவில், ‘அழகியபாண்டியபுரம் பெருந்தலைக்காட்டில் 24 குடும்பங்கள் இருக்கின்றன. நாங்கள் வசிக்கும் இடம் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது ஆகும். தற்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், எங்கள் வீடுகளை இடித்து அப்புறப்படுத்த போவதாக அறிவித்துள்ளனர். இதனால் எங்களை அந்த இடத்தை விட்டு காலி செய்யும்படி அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு வேறு எங்கும் இடம் இல்லை. எனவே எங்கள் மீது கருணை காட்டி மாற்று இடம் தர வேண்டும்‘ என்று கூறப்பட்டு உள்ளது.

ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்கத்தினர் அளித்த மனுவில், ‘குமரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சாதி சான்றிதழ் பெற மிகவும் சிரமப்படுகிறார்கள். தகுதியுள்ளவர்கள் கூட சாதி சான்றிதழ் பெற முடியவில்லை. எனவே விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்காக குறைதீர்க்கும் கூட்டம் நடத்துவது போல ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் அடிப்படை உரிமைகளை காக்க குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும்‘ என்று குறிப்பிட்டு இருந்தனர். 

Next Story