நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்: நெல்லை டவுனில்,நாளை போக்குவரத்து மாற்றம்


நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்: நெல்லை டவுனில்,நாளை போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 26 Jun 2018 4:30 AM IST (Updated: 26 Jun 2018 4:30 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாநகரில் நாளை (புதன்கிழமை) போக்குவரத்து மாற்றப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைக்க போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


நெல்லை,

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகரில் நாளை (புதன்கிழமை) போக்குவரத்து மாற்றப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைக்க போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்மன் கோவில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை ஒரு நாள் மட்டும் நெல்லை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதாவது நெல்லை சந்திப்பில் இருந்து டவுனுக்கும், டவுன் வழியாக நெல்லை சந்திப்புக்கு வரும் டவுன் பஸ்கள், டவுன் ஆர்ச், தெற்கு மவுண்ட் ரோடு, காட்சி மண்டபம், வழுக்கு ஓடை, தொண்டர் சன்னதி, வடக்கு மவுண்ட் ரோடு, நயினார் குளம் ரோடு, புதுப்பாலம், தச்சநல்லூர் சந்தி மறிச்சம்மன் கோவில், முத்துராம் தியேட்டர் வழியாக செல்ல வேண்டும்.

நெல்லை சந்திப்பில் இருந்து ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை, கடையம் செல்லும் புறநகர் பஸ்கள் வழக்கம் போல் டவுன் ஆர்ச், தெற்கு மவுன்ட் ரோடு, காட்சி மண்படம், வழுக்கு ஓடை, குற்றாலம் ரோடு, லாலுகாபுரம், பழைய பேட்டை வழியாக செல்ல வேண்டும்.

தென்காசி, செங்கோட்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடையம் பகுதியில் இருந்து நெல்லை நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் பழைய பேட்டை, தொண்டர் சன்னதி வரை வந்து, தொண்டர் சன்னதியில் இருந்து இடதுபுறமாக திரும்பி சாலியர் தெரு, குருநாதன் கோவில், ராமையன்பட்டி விலக்கு, தச்சநல்லூர் சந்திமறிச்சம்மன் கோவில், தச்சநல்லூர் ரவுண்டானா, வடக்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை வழியாக நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும். மேலப்பாளையம், குறுக்குத்துறையில் இருந்து வரும் மினி பஸ்கள் குறுக்குத்துறை ரோட்டில் உள்ள ரெயில்வே கேட் அருகில் நிறுத்த வேண்டும்.

பாளையங்கோட்டை மற்றும் நெல்லை சந்திப்பில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் 4 சக்கர வாகனங்கள் எஸ்.என்.ஹைரோட்டில் உள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நிறுத்தப்பட வேண்டும். மோட்டார் சைக்கிள்கள் டவுன் ஆர்ச், சொக்கப்பனை முக்கு வழியாக பாரதியார் தெருவில் உள்ள பாரதியார் உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நிறுத்த வேண்டும். மேலப்பாளையம், குறிச்சி, நத்தம், குறுக்குத்துறை பகுதியில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை அருணகிரி தியேட்டர், திருப்பணி முக்கு வழியாக வந்து பாரதியார் தெருவில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளி மைதானத்தில் நிறுத்த வேண்டும்.

சேரன்மாதேவி, பேட்டையில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் 4 சக்கர வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் வழுக்கு ஓடையில் உள்ள ரோஸ்மேரி பப்ளிக் பள்ளி மைதானத்தில் நிறுத்த வேண்டும். தென்காசி, செங்கோட்டை பகுதியில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்களை குற்றாலம் ரோட்டில் உள்ள உழவர் சந்தை மைதானத்தில் நிறுத்த வேண்டும். சங்கரன்கோவில், தச்சநல்லூர் பகுதியில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை தாமரைகுளம் மைதானத்தில் நிறுத்த வேண்டும்.


கோவிலுக்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் கோவிலில் அருகில் உள்ள போத்தீஸ் கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட வேண்டும். போலீசாரின் வாகனங்கள் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள போத்தீஸ் சைக்கிள் ஸ்டாண்டில் நிறுத்த வேண்டும். போலீஸ் துறை வாகனங்கள் அனைத்தும் டவுன் ஆர்ச் அருகில் பார்வதி சேஷ மஹால் எதிரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

போலீசார் அனுமதித்து உள்ள இடங்களை தவிர மற்ற இடங்களில் கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதற்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது. பக்தர்கள் இந்த பார்க்கிங் வசதியை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைத்து போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் எந்தவித இடையூறும் இன்றி தேரோட்டம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story