மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்புகுழு கூட்டம் நெல்லை டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டமாக மாறவேண்டும்
நெல்லை டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டமாக மாறவேண்டும் என்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புகுழு கூட்டத்தில் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. கூறினார்.
நெல்லை,
நெல்லை டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டமாக மாறவேண்டும் என்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புகுழு கூட்டத்தில் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. கூறினார்.
கண்காணிப்புக் குழு கூட்டம்நெல்லை மாவட்டத்தில் இந்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்வதற்கான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலக சாரல் அரங்கில் நேற்று நடந்தது. கண்காணிப்பு குழுவின் தலைவரான பிரபாகரன் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் ஷில்பா, முத்துக்கருப்பன் எம்.பி., நியமன உறுப்பினர் வென்னிலா ஜீவபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி வரவேற்று பேசினார்.
இந்திய அரசின் திட்டங்களான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சுகாதார திட்டம், தீனதயார் உபாத்தியாய கிராம மின் வசதி திட்டம், பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், பிரதம மந்திரி பயிர் காப்பிட்டு திட்டம், தேசிய நீர்வடிப்பகுதி மேலாண்மைத் திட்டம், தேசிய மதிய உணவுத் திட்டம், அந்தியோதயா அன்னயோஜானா திட்டம், தேசிய ஊரக குடிநீர் திட்டம், தேசிய நில ஆவணங்கள் கணினிமயமாக்கும் திட்டம், தேசிய சமூக உதவித்திட்டங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நிர்வாகம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் பிரபாகரன் எம்.பி. பேசியதாவது:–
தேசிய சுகாதார திட்டம்மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சுகாதார திட்டம் ஆகியவை பொதுமக்களுக்கு முழுமையாக விரைந்து சென்றடையும் விதத்தில் அரசு அலுவலர்கள் பணியாற்றவேண்டும்.
ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தபோது ஏழை–எளிய மக்கள் வீடுகட்டுவதற்கு சிமெண்ட் வாங்க கஷ்டப்பட்டதை அறிந்து அவர்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் வழங்கவேண்டும் என்று நோக்கத்தில் அம்மா சிமெண்ட் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆனால் தற்போது அம்மா சிமெண்ட் நெல்லை மாவட்டத்தில் சரியான முறையில் ஏழைகளுக்கு வழங்கப்படவில்லை. எனது சொந்த ஊரில் அம்மா சிமெண்ட் கேட்டு விண்ணப்பித்தவருக்கு 3 மாதம் ஆகியும் வழங்கப்படவில்லை.
டெங்கு காய்ச்சல்நெல்லை மாவட்டத்தில் மழைக்காலத்திலும், வெயில் காலத்திலும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. டெங்கு காய்ச்சல் பரவாத அளவிற்கு அதிகாரிகள் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும். டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டமாக நெல்லை மாவட்டம் மாறவேண்டும். இதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகளும், டாக்டர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
ஆலங்குளம், கடையம் அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பதாக புகார்கள் வருகின்றன. போதிய அளவக்கு டாக்டர்கள் நியமிக்கவேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் குழந்தை பெற்றவர்களுக்கு அம்மா பெட்டகம் வழங்கவேண்டும். இந்திய அளவில் மத்திய–மாநில அரசுகளின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி நெல்லை மாவட்டம் சிறந்த மாவட்டம் என்ற விருதை பெறவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அம்மா சிமெண்ட்கலெக்டர் ஷில்பா பேசுகையில், நெல்லை மாவட்டத்தில் மத்திய–மாநில அரசுகளின் திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அம்மா சிமெண்ட் ஏழைகளுக்கு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர், சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் இளங்கோ, மகளிர் திட்ட அலுவலர் மைக்கேல்அந்தோனி பெர்னாண்டா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாகின் அபுபக்கர், மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, வேளாண்மை இணை இயக்குநர் செந்தில்வேல்முருகன், அ.தி.மு.க. மாவட்ட சிறுபான்மைபிரிவு செயலாளர் கபிரியேல்ஜெபராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் சேர்மபாண்டி, ராஜேந்திரன், முன்னாள் யூனியன் தலைவர் குணம், பெரியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.