வடமதுரை அருகே டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு குடும்பத்துடன் விவசாயி போராட்டம்


வடமதுரை அருகே டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு குடும்பத்துடன் விவசாயி போராட்டம்
x
தினத்தந்தி 27 Jun 2018 4:30 AM IST (Updated: 27 Jun 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே, டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு குடும்பத்துடன் விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வடமதுரை,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, தென்னம்பட்டி, அய்யலூர், தாமரைப்பாடி மற்றும் காணப்பாடி ஆகிய பகுதிகளில் அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், வடமதுரை, தென்னம்பட்டி, அய்யலூர், தாமரைப்பாடி ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஆனால் வடமதுரை அருகேயுள்ள காணப்பாடி டாஸ்மாக் கடை மட்டும் செயல்பட்டு வந்தது.

இந்த கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் கடையை மூடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த கடை இருந்த கட்டிடம் காணப்பாடியை சேர்ந்த விவசாயி முத்துராமலிங்கம் என்பவருக்கு சொந்தமானது. அந்த கடையை 3 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் அவர் வாடகைக்கு விட்டிருந்தார். அந்த ஒப்பந்த காலம் முடிந்தும் கடையை காலி செய்யவில்லை. கடையை காலி செய்யும்படி முத்துராமலிங்கம் வலியுறுத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை சுமார் 10 மணியளவில் முத்துராமலிங்கம், அவருடைய மனைவி வீரமணி (வயது 33), 2–வது மகன் காளீஸ்வரன் (9) ஆகியோருடன் காணப்பாடி டாஸ்மாக் கடைக்கு வந்தார். அங்கு கடையில் ஏற்கனவே பூட்டப்பட்டிருந்த பூட்டின் மேற்பகுதியில் தான் கொண்டு வந்த மற்றொரு பூட்டை போட்டு முத்துராமலிங்கம் பூட்டினார். பின்னர் கடை வாசலில் மனைவி, மகனுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீசார் அங்கு விரைந்து சென்று முத்துராமலிங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒப்பந்த காலம் முடிந்தும் டாஸ்மாக் கடையை காலி செய்யாமல் இருப்பதாகவும், அந்த கடையை உடனே காலி செய்யவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து போலீசார் செல்போன் மூலம் துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு கடையை காலி செய்வது குறித்து பேசினர். அவர்கள் 3 மாத கால அவகாசம் அளிக்கும்படி கேட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலை முத்துராமலிங்கத்திடம் போலீசார் தெரிவித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட அவர் கடையில் பூட்டிய பூட்டை அகற்றினார். பின்னர் அவர் குடும்பத்துடன் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்.


Next Story