நடிகர் மன்சூர் அலிகானுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை


நடிகர் மன்சூர் அலிகானுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
x
தினத்தந்தி 27 Jun 2018 4:45 AM IST (Updated: 27 Jun 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தும்பிபாடி பகுதியில் கடந்த மாதம் விவசாயிகள் நடத்திய கூட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் அரசுக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியதாக அவர் மீது தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே கடந்த வாரம் நடிகர் மன்சூர் அலிகானை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து ஜாமீன் கேட்டு அவர் சேலம் மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் சிறையில் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் சிறை டாக்டர்களிடம் தெரிவித்தார். அவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கும்படி சிறை அதிகாரிகளுக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடிகர் மன்சூர் அலிகான் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு சிறுநீரக பிரிவில், அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மீண்டும் சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்து சென்றனர்.

அப்போது அவர் நடந்து கொண்டே கூறும் போது, ‘ஏற்கனவே எனக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவ பரிசோதனைக்காக இங்கு வந்துள்ளேன். சிறையில் எனக்கு யாரும் தொந்தரவு செய்வதில்லை. 8 வழி பசுமை சாலை திட்டத்தால் மக்களுக்கு என்ன பயன்கள் இருக்கிறது? என்பது குறித்து முதல்-அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். இந்த திட்டத்தை எதிர்த்து அறவழியில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும்‘ என்றார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்த நடிகர் மன்சூர் அலிகானை காண அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஏராளமானவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story