ராமேசுவரத்தில் சிக்கிய ஆயுதப்புதையல் பாதுகாப்பாக அழிக்கப்படும் வெடிகுண்டு நிபுணர்கள் தகவல்


ராமேசுவரத்தில் சிக்கிய ஆயுதப்புதையல் பாதுகாப்பாக அழிக்கப்படும் வெடிகுண்டு நிபுணர்கள் தகவல்
x
தினத்தந்தி 27 Jun 2018 4:30 AM IST (Updated: 27 Jun 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் சிக்கிய ஆயுதப்புதையலில் துப்பாக்கி குண்டுகள் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேல் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பாதுகாப்பாக அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் தோண்டத்தோண்ட சிக்கிய ஆயுதக்குவியல் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

ராமேசுவரம் தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கடற்கரை பகுதியில் மீனவர் எடிசன் தனது வீட்டில் கழிவுநீர் தொட்டி அமைப்பதற்காக குழி தோண்டும்போது சுமார் 3 அடி ஆழத்தில் இரும்பு பெட்டி இருப்பதை கண்டார். அவர் இதுகுறித்து தங்கச்சிமடம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே போலீசார் அங்கு ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியுடன் தோண்டியபோது ஆயுதங்கள் குவியல், குவியலாக இருந்தன. இதனால் திகைத்துப்போன போலீசார் நள்ளிரவு வரை தோண்டினர். வெடிகுண்டுகள், கண்ணிவெடி, தோட்டாக்கள் என சிக்கிக்கொண்டே இருந்தன. இறுதியாக சிக்கிய ஆயுதங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டன.

அப்போது, 5,500 மீடியம் எந்திர துப்பாக்கி தோட்டாக்கள், 4,928 எஸ்.எல்.ஆர். தோட்டாக்கள், 400 ஹெவி எந்திர துப்பாக்கி தோட்டாக்கள், 11 வெடிமருந்து பாக்கெட்டுகள், 199 டி.என்.டி. சிலாப் கண்ணிவெடிகள், 8 ரோல் பியூஸ் கேபிள்கள், 20 சிறிய ராக்கெட் லாஞ்சர் தோட்டாக்கள், ஒரு எக்ஸ்புளோசிவ் மோட்டார், 15 கையெறி குண்டுகள், 87 சிக்னல் லேம்ப் ஆகியவை இருந்தது தெரியவந்தது.

பின்னர் அவை அனைத்தும் 3 வகையாக தரம்பிரிக்கப்பட்டு பாதுகாப்பாக ராமநாதபுரம் ஆயுதக்கிடங்கிற்கு கொண்டுசெல்லப்பட்டன. மற்ற வெடிபொருட்கள் குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும் என்பதால் குழிதோண்டி அதில் தண்ணீர் நிரப்பி புதைத்து வைக்கப்பட்டன.

மதுரையில் இருந்து வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு குழுவினர் வந்து எடிசனின் வீடு மற்றும் சுற்றிலும் உள்ள பகுதிகளில் ஆய்வு செய்தனர். ஆனால் வேறு எங்கும் ஆயுதங்கள் இல்லை.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா கூறுகையில், ‘‘தங்கச்சிமடத்தில் எடுக்கப்பட்ட தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் குறித்து திருவாடானை நீதிபதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வந்து பார்வையிட்டதும் இந்த வெடிபொருட்களை அழிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். இவை அனைத்தும் எந்த ஆண்டு, எந்த நாட்டில் தயார் செய்யப்பட்டவை என்பது குறித்த தகவல்களை சேகரிக்க மத்தியபிரதேசத்தில் உள்ள ராணுவ தளவாட மையத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.

வெடிகுண்டு நிபுணர்கள் கூறும்போது, ‘‘இந்த வெடிபொருட்கள் அனைத்தும் ராணுவத்தில் பயன்படுத்தக்கூடிய அதிக சக்தி வாய்ந்தவையாக உள்ளன. இது பெரிய பாலங்கள், கட்டிடங்களை தகர்க்கக்கூடியவை. இவற்றை 2 நாட்களுக்கு மேல் பத்திரப்படுத்த முடியாது. உடனடியாக அழிக்க வேண்டும். உரிய அனுமதி கிடைத்ததும் வெடிபொருட்கள் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்துச்செல்லப்பட்டு பாதுகாப்புடன் அழிக்கப்படும்’’ என்றனர்.

1983–ம் ஆண்டு இலங்கையில் இனக்கலவரம் வெடித்தது முதல் ராமேசுவரம் தீவு பகுதியில் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட இலங்கை போராளி அமைப்பினரின் நடமாட்டம் இருந்தது. இந்த வெடிபொருட்களை அவர்கள் புதைத்துவைத்து இருக்கலாம் என கருதப்படுகிறது. அப்போது இந்த பகுதி ஆள்நடமாட்டம் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story